மோசமான ஏச்சுப் பேச்சுக்கள்
அன்பான சொல் அழகான புன்னகையை உதிக்கச்செய்கிறது
கற்களும் கம்புகளும் எமது எலும்புகளை முறித்துவிடலாம். ஆனால் வார்த்தைகள் அப்படி எம்மை நோவிப்பதில்லை என்று சொல்வதை நாம் கேட்டிருக்கலாம்.
ஆனால் உண்மை அதுவல்ல. வார்த்தைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியும் அதன் வலி. சில வார்த்தைகள் மனதை உசுப்பி உறுத்தி தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும்.
ஒருவர் மனதில் தோன்றும் வலியின் அளவை, அதன் கனதியை மற்றொருவரால் மிக இலகுவாகப் புரிந்துகொள்ள முடியாது.
நாம் வீட்டிலும் வீட்டுக்கு வெளியிலும் பிள்ளைகளுக்கு உபயோகிக்கும் சில சொற்கள் அல்லது ஏச்சுப் பேச்சுக்கள் அவர்களின் உள்ளங்களில் அழிக்க முடியாத காயங்களாக மாறும் சந்தர்ப்பங்களை உருவாக்கலாம்.
அன்பான சொற்கள் எப்படி எங்கள் முகத்தில் அழகான புன்னகையை உதிக்கச்செய்து உற்சாகப்படுத்துமோ அவ்வாறே அசிங்கமான சொற்கள் எங்களை வெட்கப்படவைத்து வெறுப்பையும் கவலையையும் கோபத்தையும் ஏற்படுத்தி விடும்.
சொற்களின் தாக்குதல்களால் நோவை, துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகளின் மனதிற்கு ஏற்படும் அதிர்வுகள் பாரமானவை, தாங்கிக்கொள்ள முடியாதவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மோசமான ஏச்சுப் பேச்சுக்களால் ஏற்படும் தழும்புகள் வருடக்கணக்கில் மனதில் மங்காமல் இருந்து வாழ்க்கைக்கு வேதனையை, துயரத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும்.
இந்த உளவியல் தழும்புகள்…
1.பிள்ளைகளை நிச்சயமற்றவர்களாக ஆக்கிவிடலாம்
2.அவர்களது பெறுமதியை உணர்ந்துகொள்ள முடியாதவர்களாக மாற்றிவிடலாம்
3.திறன்களை வெளிப்படுத்த முடியாதவர்களாக அவர்களை ஆக்கிவிடலாம்
4.அவர்களது நடத்தையில் மோசமாக தாக்கங்களை ஏற்படுத்தலாம்
5.அவர்களது மூளை விருத்தியடையும் முறையை மாற்றியமைக்கலாம்
6.அவர்களது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகயை ஏற்படுத்தலாம்
அதேபோன்று நாம் பிள்ளைகளுக்குப் பயன்படுத்தும் மோசமான வார்த்தைகளை அவர்களும் அவற்றை பழக்கத்தில் ஆக்கிக்கொள்வார்கள். காலப்போக்கில் அவற்றை பாவிக்கும் போது வெட்கமோ கூச்சமோ அடையமாட்டார்கள்.
பிள்ளைகளுக்கு ஏசுவதை, முகத்தில் பாய்ந்து எறிந்து விழுவதை, அசிங்கமான வார்த்தைகளால் அவதியுற வைப்பதை தடுத்துக்கொள்வோம்.
அழகான வார்த்தைகள் பேசி அழகான சமூகம் அமைக்க துணையாக இருப்போம்.