இருப்பதை இருப்பதாக ஏற்றுக்கொள்வேம். எனக்கு கிடைத்திருப்பது எனக்கானவை

ஒரு மீனவன் கடற்கரைக்கு அருகாமையில் பரந்து விரிந்த கிளைகளுடன் இதமான நிழல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஓர் மரத்தடியில் அமைதியாக சாய்ந்தவாறு கடலைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அந்த இடத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு செல்வந்தர் அவனை பார்த்து…
‘நீ மீன் பிடிக்கச் செல்லாமல் ஏன் கடலை பார்த்துக்கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டார்.
‘இன்றைய நாளுக்குத் தேவையான மீன்களை நான் பிடித்து விட்டேன்’ என்று அந்த மீனவன் மிகவும் அமைதியாக பதில் கொடுத்தான்.
அதைக் கேட்ட அந்த செல்வந்தர் சற்றுக்கோபம் அடைந்தவாறு…

‘எந்தக்காரணமும் இல்லாமல் இந்த மரத்தடியில் சாய்ந்துகொண்டு நேரத்தை அநியாயமாக வீணடிக்காமல் உனக்கு அதிகமாக மீன் பிடிக்க முடியுமே! என்று அவனை கேட்டார்.
அதிகமான மீன்களைப் பிடித்து என்ன செய்ய முடியும். என மீனவன் செல்வந்தரை கேட்டான்.
நீ அதிகம் மீன்கள் பிடித்தால் அதிகமாக சம்பாதிக்க முடியும். அதிகம் பணம் கிடைத்தால் ஒரு பெரிய மீன்பிடி வள்ளத்தை வாங்கலாம். என்று செல்வந்தர் கூறினார்.
சரி! அதற்குப் பிறகு நான் என்ன செய்வது? என்று மீனவன் செல்வந்தனைக் கேட்டான்.

ஆழமான கடலுக்கு நீண்ட தூரம் வரை சென்று அதிகமான மீன்களைப் பிடிக்க முடியும். நிறைய சம்பாதிக்கவும் முடியும். என்று பதில் கொடுத்தான்.
அதற்குப் பிறகு நான் என்ன செய்ய வேண்டும்? என்று மீண்டும் மீனவன் கேட்டான்.
உனக்கு பல மீன்பிடி வள்ளங்களை வாங்கி பலரை தொழிலுக்கு அமர்த்தி கைநிறைய சம்பாதிக்க முடியும் என்றார்.
அப்படியானால் அதன் பிறகு நான் செய்வது? என்று அடுத்த தடவையும் செல்வந்தரைக் கேட்டான்.
என்னைப் போன்று ஒரு பெரிய பணக்காரனாக நீ ஆகிவிடுவாய் என்றார்.

நீங்கள் சொல்வது சரி! உங்களைப் போன்ற பெரிய பணக்காரனாக ஆகினால் எனக்கு என்ன கிடைக்கும்? என்று மீண்டும் செல்வந்தரைக் கேட்டார்.
ஆம்! உனக்கு சந்தோசமாகவும் மனநிம்மதியாகவும் வாழ்க்கையை வாழ முடியும் என்றார் அந்த பணக்கார மனிதர்.

அதைக் கேட்ட அந்த மீனவன் “அதைத்தான் நான் இப்போதும் அனுபவித்து வருகிறேன்! என்று மிகவும் அமைதியாகவும் அழகாகவும் கூறினார்.
வாழ்க்கையை அனுபவிக்கவும் சந்தோசமாக இருக்கவும் நாளை வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை. அதற்கு பெரிய செல்வந்தராக இருக்க வேண்டும் என்ற தேவையும் இல்லை. பொருளும் புகழும் தேவை என்றும் இல்லை. மிகப் பெரிய அறிவாற்றல் வேண்டும் என்ற நியதியும் இல்லை. இந்த நிமிடம்தான் வாழ்க்கை என்பது. இந்தச் சந்தர்ப்பம் தான் வாழ்க்கை என்பது.

அதனால் இந்த நிமிடத்திலிருந்தே வாழ்க்கையை இன்பமாக அனுபவித்து வாழ முயற்சிக்க வேண்டும். ஆடு மாடுகள் சக்கை போட்டுக்கொண்டு இருப்பது போன்று இறந்த காலத்தில் நிகழ்ந்த பாதகமான நிகழ்வுகளை எண்ணிக்கொண்டும் நாளை எப்படி இருக்மோ? என்ன நடக்குமோ? என்று எதிர்காலத்தைப் பற்றி எண்ணி எண்ணி இருப்பதும் மனக்குழப்பத்தையும் எல்லா விடயங்களில் அதிருப்தியை ஏற்படுத்தவும் காரணமாக அமைந்துவிடும்;.

இருப்பதை இருப்பதாக ஏற்றுக்கொள்வேம். எனக்கு கிடைத்திருப்பது எனக்கானவையே என்பதையும் ஞாபகப் படுத்திக்கொள்வோம். அவை நிறைவான வாழ்வுக்கு வளம் சேர்க்கும் விடயங்காளாக அமைந்துவிடும்.

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top