இளம்பருவ மன ஆரோக்கியம்
இளம்பருவம் என்பது 10 முதல் 19 வயது வரையிலான பிள்ளை பருவத்திற்கும் முதிர்வயதுக்கும் இடைப்பட்ட வாழ்க்கையின் ஒரு கட்டமாகும். இது மனித வளர்ச்சியின் ஒரு தனித்துவமான கால கட்டமாகும். மனித வாழ்க்கையின் நல்ல ஆரோக்கியத்திற்கான அடித்தளங்களை அமைப்பதற்கான முக்கியமான பருவகாலமுமாகும்.
இளம் பருவத்தினர் விரைவான உடல் மற்றும் உளவியல் வளர்ச்சியை அனுபவிக்கின்றனர். அத்துடன் இப்பருவத்தில் சிறந்த அறிவாற்றலும் வளர்ச்சி அடைகிறது. இந்த வளர்ச்சிகள் யாவும் அவர்கள் எப்படி விடயங்களை உணர்கிறார்கள், எப்படி சிந்திக்கிறார்கள், எப்படி முடிவுகளை எடுக்கிறார்கள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள உலகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதில் எல்லாம் செல்வாக்குச் செலுத்துகிறது.
இளம்பருவ மன ஆரோக்கியம் என்பது இளம் பருவத்தினரின் உணர்ச்சிகள், சிந்தனைகள், அவர்களது மன ஆரோக்கியம் என்பவற்றுடன் தொடர்பு பட்டுள்ளது. பொதுவாக 9 முதல் 18 வயதுடையவர்கள் கட்டிளைஞர் என வரையறுக்கப்படுகிறார்கள். ஒரு கட்டிளைஞனின் வாழ்க்கையில் இந்தப் பருவம் முக்கியமானது. ஏனெனில் அவர்களின் மூளை விரைவான வேகத்தில் முதிர்ச்சியடைகிறது. அதனால் நல்ல மன ஆரோக்கியத்தைப் பேணுவது மிகவும் முக்கியமானது.
உலகளவில் 10-19 வயதுடைய ஏழு பேரில் ஒருவர் ஏதோ விதத்தில் மனநலக் கோளாறை அனுபவிக்கிறார் என உலக சுகாதார அமைப்பு தகவல் படுத்தியுள்ளதை காணலாம். இது உலகளாவிய நோய் சுமைகளில் 13% ஆகும்.
மனச்சோர்வு, பதட்டம் மற்றும் நடத்தை கோளாறுகள் என்பன இளம் பருவத்தினரிடையே நோய் மற்றும் இயலாமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
அதே சமயம் 15-29 வயதிற்குட்பட்டவர்களிடையே மரணத்திற்கான நான்காவது முக்கிய காரணமாக தற்கொலை இருப்பதாகவும் அந்த நிறுவனம் 17 நவம்பர் 2021 இல் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பருவ வயதினரின் மனநல ஆரோக்கியத்தை முறையாக கையாளத் தவறுவதன் விளைவுகள் சாதாரணமானதல்ல. அது முதிர்வயது வரை நீடிக்கின்றது.
அத்துடன் அது அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்க வைக்கிறது.
அவர்கள் பெரியவர்களாக ஆகும் போது திருப்திகரமான வாழ்க்கையை நடத்துவதற்கான வாய்ப்புகளை கட்டுப்படுத்துகிறது.
இந்த நிலை ஆரோக்கியமானதல்ல.
எமது பொறுப்பு
எமது கட்டிளமை பருவத்தினரின் மனநலத்தை மேம்படுத்துவது எமது கடமையாகும்.
▪ஒவ்வொரு தனிநபரின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறனை வலுப்படுத்த தடுப்பு நுட்பங்களை நாம் காட்டிக் கொடுக்க வேண்டி இருக்கிறோம்.
▪ஆபத்தான நடத்தைகளில் இருந்து தப்பிக்கவும் மாற்றுத் தீர்வுகள் பெறவும் வழிகாட்ட வேண்டி இருக்கிறோம்.
▪கடினமான சூழ்நிலைகள் மற்றும் துன்பங்களை நிர்வகிப்பதற்கான மன தைரியத்தை வளர்ப்பதன் அவசியம் பற்றி கற்றுக் கொடுக்க வேண்டி இருக்கிறோம்.
▪அவர்கள் வாழ்வின் எழுச்சிக்காக
ஆதரவான சமூக சூழல்கள் மற்றும் சமூக வலைப்பின்னல்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டி இருக்கிறோம்.
இளம் பருவத்தினரின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் வெவ்வேறு சமூக அமைப்புகளின் பங்களிப்பு முதன்மையானது. எடுத்துக்காட்டாக பாடசாலை, பள்ளிவாசல்கள், சுகாதாரம் அல்லது சமூக பாதுகாப்பு அமைப்புகள், இளைஞர் கழகங்கள், சமூக அபிவிருத்தி நிறுவனங்கள் போன்ற அமைப்புகளின் சேவைகளும் வழிகாட்டல்களும் கட்டாயம் தேவைப்படும்.
இளம் பருவத்தினரின் மன ஆரோக்கியம்
▪மகிழ்ச்சியான, நேர்மறையான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.
▪நல்ல மன ஆரோக்கியம் கொண்ட இளம் பருவத்தினர் பொதுவாக தங்களைப் பற்றியும் தங்கள் வாழ்க்கையைப் பற்றியும் நேர்மறையாக உணர்கிறார்கள்.
▪நல்ல உறவுகளை தேர்வு செய்வார்கள்.
▪ஆரோக்கியமான பழக்க வழக்கங்களளை கடைபிடிப்பார்கள்.
▪முறையான உணவு தேர்வுகளை பின்பற்றுவார்கள்.
▪தவறாமல் உடற்பயிற்சி செய்வார்கள்.
▪நன்றாக தூங்குவார்கள்.
▪பயனும் பெறுமதியும் நிறைந்த நல்ல மனிதர்களாக வாழ்வார்கள்.
இளம்பருவ மனநலம் முக்கியம் என்பதால், ஆரோக்கியமான இளம் பருவத்தினரை உருவாக்க, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், மேலும் பிள்ளைப் பருவத்தில் இருந்தே அவர்களுக்கு ஆதரவாக இருக்க நுட்பங்களை நாம் உருவாக்க வேண்டும்.