மனிதர்கள் வாழும் இடம்
“உங்கள் வீடுகளை மனிதர்கள் வாழும் இடங்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்”
பிள்ளைகள் வளர்ப்பதில் வளர்வதில் அல்லது பராமரிப்பதில் பெற்றோர் பங்கு மிகவும் வலிமைமிக்கதாக இருக்கிறது என்பதை நாம் எவரும் மறுக்கமாட்டோம். பிள்ளை வீட்டில் வளரும் விதம் அல்லது வளர்க்கப்படும் விதம் அதன் எதிர்காலத்தை அழகும் அர்த்தமும் உள்ளதாக ஆக்கிக்கொள்ள திறவுகோலாக அமையலாம். அல்லது அசிங்கம் நிறைந்தாக மாற்றிக்கொள்வதற்கான மிக
முக்கிய காரணமாக அமையலாம்.
பிள்ளைகள் வாழ்வை ஆரம்பிக்கும் முதலாவது இடமான ‘வீடு’ வரவேற்பு, அன்பு, அரவணைப்பு, அமைதி போன்ற மனித மனங்கள் எதிர்பார்க்கும் மென்மையான குணங்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதை பிள்ளை உணர்ந்து கொண்டால் மட்டுமே பக்குவமான, பாதுகாப்பான இடத்தில் வளர்கிறேன் என்ற அழகான உணர்வை தன் மனதுக்குள் விதைக்க ஆரம்பிப்பான்.
பொருட்களை பயன்படுத்தி அலங்காரமாக கட்டப்பட்ட இடமாக மட்டும் வீடுகள் இருக்காமல் மனிதர்கள் வாழும் அழகான இடமாக அது இருக்க வேண்டும். “உங்கள் வீடுகளை மனிதர்கள் வாழும் இடங்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என வில்லியம் சேக்ஸ்பியர் சொன்னதை இங்கு ஞாபகமூட்ட விரும்புகிறோம்.
- எங்கள் வீட்டின் அத்திவாரம் என்ன?
- எங்கள் வீடு யாருடைய உருவாக்கம்?
- அது பொறாமையின் இடமா?
- அது வெறுப்பின் இடமா?
- கவலையின் இடமா?
- ஏதாவது பாதிப்பான உணர்வுகளின் இடமா?
- கட்டலை, அதிகாரம் விடுக்கும் இடமா?
- சண்டை சச்சரவுகள் நிறைந்த இடமா?
- நண்பர்களின் அல்லது மற்றவர்களின் கருத்தோட்டத்தில் உருவான இடமா?
- வாழப்பிடிக்காத இடமா?
அல்லது
- இறைவனின் சட்டத்தாலும் அவனது ஆட்சியாலும் உருவான இடமா?
- ஆன்மீகத்தின் அரவணைப்பால் அலங்காரமான இடமா?
- மகிழ்ச்சியும் மனநிறைவும் கொண்ட இடமா?
- மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் இடமா?
போன்ற வினாக்களுக்கு பதில் தேடினால் சரியான பதிலை எங்கள்
உள்ளுணர்வுகள் எங்களுக்கு எடுத்துச்சொல்லும்.
- வீடு உடலுக்கும் உள்ளத்திற்கும் அமைதியை பெற்றுத்தரும் இடமாக இருக்க வேண்டும் என்பதையே நாம் விரும்புவோம்.
- வன்முறைகள் வரக்கூடாது என்று ஏங்குவோம்
- தர்க்கங்களால் தகர்ந்து விடக்கூடாது என்று உறுதிப்பட கூறுவோம்.
- வேற்றுமைகள் வீட்டுக்குள் நிகழ்வதை யாரும் அனுமதிக்க மாட்டோம்.
இதுதான் பிள்ளைகளினதும் தேவையாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
சிறந்த சிந்தனையுள்ள நல்ல பண்புள்ள மனிதர்கள் வாழும் வீட்டிலிருந்துதான்
ஆரோக்கியமான மனிதர்கள் உருவாகின்றனர்.