எதிர்மறை எண்ணங்களை வெல்வது எப்படி?
எங்கள் மனதில் பூக்களையும் வளர்க்கலாம்.
களைகளையும் வளர்க்கலாம்.
எதிர்மறை எண்ணம் என்பது நாம் எம்மை பற்றியும் எம்மை சுற்றியுள்ளவை பற்றியும் பிழையாக, தவறாக அல்லது மோசமாக சிந்திக்கும் முறையை குறிக்கிறது.
தொடர்ந்து நாம் எதிர்மறை எண்ணங்களை அனுபவிக்க ஆரம்பித்தால் அப்படியே அந்த அனுபவம் நீடித்தால் நாம் எம்மை பற்றியும் நாம் வாழும் உலகத்தை பற்றியும் நினைக்கும் விதத்தை தீவிரமாக பாதிக்கச் செய்துவிடும்.
நாம் நினைக்கும் விதத்தின் விளைவு ஒன்றோ நன்மை தரும் முடிவாக இருக்கலாம் அல்லது தீங்கு ஏற்படுத்தும் முடிவாக இருக்கலாம்.
நலவையும் தீமையையும் தீர்மானிக்கும் கருவியாக எமது எண்ணங்கள் இருக்கின்றன. எமது எண்ணங்களை நல்லனவாக மாற்ற வேண்டுமானால் எதிர்மறை எண்ணங்கள் வருவதை கட்டாயம் தடுத்தேயாக வேண்டும்.
எதிர்மறை எண்ணங்களை தடுப்பதற்கான ஒரே வழி நேர்மறையான எண்ணங்களை வளர்க்கும் ஆற்றலை வலுப்படுத்திக் கொள்வதாகும். உண்மையான, நேர்மையான, நீதியான, அழகான, ஆக்கமான, பயனான எண்ணங்களால் எங்கள் மனதை நாம் நிரப்பிக்கொள்ளும் போது எதிர்மறை எண்ணங்கள் வேரூண்ட மனம் இடம் தராது.
இதை நாம் ஒரு எளிய வழியில் யோசிப்போம். எங்கள் மனதை ஒரு தோட்டமாக கற்பனை செய்வோம். அந்த தோட்டத்தில் களைகள் வளர்வது போன்று எதிர்மறையான எண்ணங்கள் வளர்ந்தால் அது பயனற்று, பாழடைந்து போய்விடும். அந்த தோட்டத்தில் பூக்கள் வளர்வது போன்று மேம்பட்ட எண்ணங்கள் வளர்ந்தால் அது வளமான, வசந்தமான இடமாக ஆகிவிடும்.
அப்படியானால் எங்கள் மனம் தோட்டம் போன்றது. எங்கள் எண்ணங்கள் அதில் நாம் விடும் விதைகள். எங்களால் பூக்களையும் வளர்க்கலாம். களைகளையும் வளர்க்கலாம்.
எங்கள் எண்ணங்களை மாற்றுவதன் மூலம் எங்களை மேம்படுத்த முடியும்.
மனதை மகிழவைக்கும் மலர்கள் மலரும் பூங்காவனமாக, வாழ்வை வனப்பாக்கும் வளமான எண்ணங்கள் வளரும் சோலையாக எமது மனதை மாற்றி அமைப்போம்.