“தூய்மையான உள்ளம்”
தூய்மையான உள்ளம் அமைதியான உள்ளமாகும்
உள்ளம் திறந்து செய்கின்ற வேலைகள் மட்டுமே முழுமை அடையும், வெற்றியும் பெறும் என்பது எமக்கு நன்றாகவே தெரியும்.
தெளிவான, பலமான, பண்பான, நம்பகமான, ஊக்கமான, உயிரோட்டமான குணங்களை கொண்ட உள்ளம் அழகும் ஆரோக்கியமும் கொண்டு ஆன்மீகத்தால் அலங்காரமான உள்ளமாக இருக்கும். இது நல்ல உள்ளமாக செயற்படும்.
நாம் செய்யும் ஒவ்வொரு செயற்பாட்டிலும் நல்ல உள்ளம் சேர்ந்து கொள்ள வேண்டும். சேர்க்கப்பட வேண்டும்.
உண்பதில், உறங்குவதில், படிப்பதில், படிப்பிப்பதில், கொடுப்பதில், எடுப்பதில் இப்படி எல்லாவற்றிலும் நல்ல உள்ளம் கட்டாயமாக கலக்க வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் எம்மோடு உரையாடி எமது உள்ளத்தின் தன்மையை, அதன் தரத்தை தெரிந்துகொள்ள வேண்டும்.
மனித உள்ளம் பல விதத்தில் பல ரகத்தில் போசணையாகிறது.
• இறந்துபோன உள்ளம்
• இருண்டுபோன உள்ளம்
• கடினமான உள்ளம்
• கருகிவிட்ட உள்ளம்
• குருடான உள்ளம்
• பூட்டப்பட்ட உள்ளம்
• ஆடி அசையும் உள்ளம்
• பெருமைகொண்ட உள்ளம்
• பேராசைபிடித்த உள்ளம்
• வெறுமையான உள்ளம்
• நல்ல உள்ளம் என்று போலியாக நினைத்திருக்கும் உள்ளம்
இவை எல்லாமே உள்ளத்திற்குள் இருக்கும் உள்ளங்கள்.
நாம் உள்ளத்திற்குள் உருவாக்கிக்கொள்ளும் உள்ளங்கள்.
இவை எவையும் நல்ல உள்ளங்களல்ல.
இந்த உள்ளங்களில் எந்த உள்ளம் எவருக்கு இருந்தாலும் அது அவரால் வளர்க்கப்பட்ட உள்ளமேயாகும்.
இதில் எந்த உள்ளம் என்னுள் இருக்கிறது என்று உள்ளம் திறந்து எங்களையே கேட்டுப் பார்ப்போம்.
இதில் எதையும் நாம் விரும்ப மாட்டோம்.
நாம் ஒவ்வொருவரும் விரும்புவதோ தூய்மையான உள்ளத்தை.
ஆனால் தூய்மையான உள்ளத்தின் தன்மைதான் என்ன?
• இறைவன் மீது விசுவாசம் கொண்ட உள்ளம்
• இறைவன் நிறுவியிருக்கும் வரம்புகளையும் தடைகளையும் அவதானித்து அவனுக்கு முழுமையாக அடிபணியும் உள்ளம்
• இறைவனின் நினைவில் அமைதி காண்கின்ற உள்ளம்
• மோசமான தன்மைகளில் இருந்து விடுபட்ட உள்ளம்
• பேராசை, சுயநலம், முட்டாள்தனம், சோம்பல் என்பவற்றிலிருந்து விடுபட்ட உள்ளம்
• வணக்கவழிபாடுகளில் சோர்வடையாத உள்ளம்
• நல்ல செயல்களை சரியாக செய்வதில் அக்கறை காட்டும் உள்ளம்
• போதுமென்ற உள்ளம் கொண்ட உள்ளம்
• உள்ளத்தை சரிக்கிவிட வைத்துவிடாதே என்று இறைவனை பிரார்த்திக்கும் உள்ளம்
• சங்கடங்ளின்போது நிதானத்தையும் பொறுமையையும் கடைபிடிக்கும் உள்ளம்
• நல்ல நடத்தைகள் செய்து இனிமையும் மகிழ்ச்சியும் காணும் உள்ளம்
இந்த தன்மைகளால் எமது உள்ளம் நிரம்பியிருந்தால் நாம் பாக்கியசாலிகள்.
நாம் தூய்மையான உள்ளத்திற்கு சொந்தக்காரர்களாக எம்மை மாற்றிக்கொள்வதில் ஆர்வமாக இருப்போம்.