ஒவ்வொரு மரமும் வெவ்வேறு வேகத்தில் வளர்கிறது ஒவ்வொரு பிள்ளையும் அதன் தனித்துவத்தில் வளர்கிறது

ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்


ஒவ்வொரு மரமும் வெவ்வேறு வேகத்தில் வளர்கிறது

ஒவ்வொரு பிள்ளையும் அதன் தனித்துவத்தில் வளர்கிறது

தோட்டத்திலுள்ள மரங்களை சற்று நோக்குவோம். ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு அளவில் வளர்ந்து இருப்பதையும் ஒவ்வொரு அளவிலான காய்களைத் தருவதையும் காண்கிறோம்.

சில மரங்களில் கிளைகள் முறிந்து விழும் அளவிற்கு காய்கள் நிரம்பியிருக்கின்றன.
சில மரங்களில் ஒரு சில கிளைகளில் மட்டும் காய்கள் தெரிகின்றன.
ஒரு காயேனும் இல்லாமல் மொட்டையாக சில மரங்கள் நிற்கின்றன.
பலா மரத்தில் பெரிய காய்களும் நெல்லி மரத்தில் சிறிய கனிகளும் இருக்கின்றன.
நாம் எவ்வளவுதான் அவை ஒவ்வொன்றுக்கும் இடையில் வித்தியாசங்கள் கண்டாலும் அவற்றின் இயல்பான பாதையில் அவை வளர்ந்துகொண்டுதான் செல்கின்றன. குழுங்கிக் காய்த்திருக்கும் மரமும், இலைகள் உதிர்ந்து மொட்டையாக நிற்கின்ற மரமும் பல விதத்தில் எமக்கு பயனுள்ளவையாக இருக்கின்றன என்பதை நாம் அறிந்தும், மனதார ஏற்றுக்கொண்டும் இருக்கிறோம்.

எமது பிள்ளைகளும் அப்படித்தான். ஒருவருக்கொருவர் வித்தியாசமான திறன்களையும் ஆற்றல்களையும் உடையவர்கள்; அதனால் அவர்களை மற்றப்பிள்ளைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கவோ ஒப்பிட்டுக் குறைகூறவோ எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

ஒவ்வொரு பிள்ளையும்
– தனிப்பட்ட தன்மையுடையவர்
– மேன்மையானவர்
– மற்றவருடன் ஒப்பிடப்பட முடியாதவர்
– மாறுபட்ட ஆற்றல்கலைக் கொண்டவர்

அவர்களின் வேறுபாடுகளை பாராட்டிப் புகழ்வதுடன் அவர்களது ஆர்வம், அக்கறை, கனவுகள் என்பவற்றை வெளிப்படுத்தவும் அவற்றை அடைந்து கொள்வதற்கு படிப்படியாக அறிவுறுத்தல்களை வழிகாட்டல்களை வழங்குவது பெற்றோரினதும் ஆசிரியர்களினதும் பொறுப்பாகும்.

இந்தப் பொறுப்பை செய்யத்தவறும் பொழுது அவர்கள் தாழ்வு மனப்பான்மையுள்ளவர்களாக மாறிவிடவும் அல்லது எங்கள் பார்வையில் அவர்கள் “தரமானவர்கள் அல்லர்” என்ற உணர்வு ஏற்படவும் காரணமாக ஆகிவிடுவார்கள்.

“ஒவ்வொருவரும் மாறுபட்டவர்கள், வித்தியாசமான திறமைகளையுடையவர்கள் என்றும் மற்றவர்களைவிட நாம் வேறுபட்டவர்களாக இருப்பதில் எந்தச்சிக்கலும் இல்லை என்பதையும் மற்றவர்களைப் பின்பற்றி அவர்களைப்போல் நாம் இருக்க வேண்டிய தேவையில்லை” என்பதையும் பிள்ளைகளுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும்.

“எமது பிள்ளைகள் எமது கவனத்தில் வாழும் தனிநபர்கள்”. அவர்களுக்கு ஒப்பீடுகள், வேற்றுமைகள், வித்தியாசங்கள் காட்ட முடியாது.

பிள்ளைகள் ‘காபன்தாள்’ போல் ஒருவர் மற்றவரைப் போல் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. நாம் அவர்கள் ஒவ்வொருவரில் தனிப்பட்ட திறமைகளை காணவே ஆசையும் ஆர்வமும் காட்டவேண்டும். அவ்வாறு எமது பிள்ளைகளின் வேறுபட்ட திறமைகளை, வேறுபாடுகளை கண்டுபிடிப்பதன் மூலம் அவர்களின் உண்மையான ஆற்றல்களை, வீரச்செயல்களை கண்டு பெருமகிழ்ச்சியும், மனத்திருப்தியும் அடைய முடியும்.

“எமக்கு கண்குளிர்ச்சி தரும் பிள்ளைகளாக எமது பிள்ளைகள் ஆகட்டும்”

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top