கணவன்- மனைவி அறிமுகமாதல்

கணவன்- மனைவி அறிமுகமாதல்

திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அறிமுகமாதல் என்பது ஒரு நண்பர் மற்றொரு நண்பருக்கு அறிமுகமாதல் போன்றதல்ல. ஒரு ஆசிரியர் ஓர் மாணவருக்கு அறிமுகமாதல் போன்றதுமல்ல. ஒரு மனிதர் இன்னொரு மனதிருக்கு அறிமுகமாதல் போன்றதுமல்ல. இந்த ஒவ்வொரு அறிமுகமும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் தொடர்வது போன்று முடிந்துவிடவும் செய்யலாம். ஒரு தடவை அறிமுகமாகி அத்தோடு நிறைவு பெறவும் செய்யலாம். இவ்வாறான அறிமுகங்களுக்கு பெரும்பாலும் ஒரு எல்லையும் ஒரு முடிவும் இருக்கலாம்.

ஆனால் மணவாழ்க்கையில் ஒருவர் மற்றவருக்கு தனது உணர்வுகளை எதிர்பார்ப்புகளை பலங்களை பலவீனங்களை அறிமுகப்படுத்துவதும் அறிமுகமான பிறகு அவற்றை ஏற்றுக்கொண்டு வளர்க்க வேண்டியவற்றை வளர்க்கவும் அகற்ற வேண்டியவற்றை அகற்றவும் ஒருவர் மற்றவருக்கு துணையாக இருக்கவும் வேண்டி இருக்கிறார்கள்.

கணவன் மனைவி அறிமுகம் என்பது ஒரு தடவையில் ஒரு நாளில் ஒரு வாரத்தில் ஏற்பட்டு முடிவடையும் விடயமல்ல. ஒருவர் மற்றவருக்கு தன்னை அறிமுகப்படுத்தவும், அறிமுகப்படுத்திய பிறகு அறிமுகமாகிய விடயங்களை புரிந்துகொள்வதும் மிகவும் முக்கியமாகும். சிலசமயம் சிலர் ஒருவர் மற்றவரை உடனடியாகவே புரிந்துகொள்ளலாம். சில சமயம் புரிந்துகொள்ள காலம் எடுக்கலாம். சில சமயம் புரிந்து கொள்ளாமல் இருக்கவும் செய்யலாம். இதில் புரிந்துகொள்ளாமல் இருப்பது மிகவும் அபாயமானது.

சில திருமணத்தம்பதிகள் ஒருவர் மற்றவரின் திறமைகள் ,ஆற்றல்கள் பலங்கள், பலவீனங்கள், ஆசைகள் போன்ற எதையுமே புரிந்துகொள்ளாமல் ஏதோ திருமணமாகிவிட்டோம் என்ற எண்ணத்திலேயே இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த இடத்தில்தான் கணவன் -மனைவி உறவு சிதைந்துபோய் மணவாழ்க்கை மயக்கமும் ஏமாற்றமும் நிறைந்ததாக ஆகிச்செல்ல ஆரம்பிக்கிறது. அல்லது எந்த விதமான உறுதியும் ஆரோக்கியமும் அற்றதாக மாறிச்செல்ல காரணமாகிறது.

நீங்கள் புதிதாக திருமணமாகிய தம்பதிகளாக இருந்தால் ஒருவர் மற்றவருக்கு தன்னை அறிமுகப்படுத்த அவகாசம் எடுங்கள். உங்கள் கணவர் உங்கள் மனைவி உங்களை அறிந்துகொள்ள காலம் எடுக்கலாம். உடனடியாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து விலகிக்கொள்ளுங்கள். ஒரு நாளில் உங்களை அறிமுகமாக்கிவிடலாம் என்றும் எண்ணலாகாது.

எங்களை எங்களுக்கே தெரிந்தகொள்ள எவ்வளவு காலம் எடுத்திருக்கும்? அப்படி இருக்கும்போது புதிதாக திருமணமாகிய ஒருவரை எப்படி ஒரே நாளில் தெரிந்து கொள்வது? உடலால் ,உணர்வால், அறிவால் ஆற்றலால், சிந்தனையால் இப்படி பல விடயங்களில் வேறுபட்ட ஒருவரோடு வாழ்ந்து பார்க்கும் போதுதான் அவரவர் தன்மைகளை தனித்துவமான இயல்புகளை புரிந்துகொள்ள முடியும்.
ஒரு ஆணின் இயல்பான நடத்தைகளை ஒரு பெண் அறியவும், ஒரு பெண்ணின் இயல்பான நடத்தைகளை ஒரு ஆண் அறியவும் காலம் தேவைப்படும்.

ஆரம்பத்திலேயே பூரணமாக அறிமுகமாகவேண்டும் என்ற தேவையில்லை. ஆனால் ஒருவர் மற்றவருக்கு தன்னை முழுமையாக அறிமுகமாக்கி உணர்வால், உடலால், உறவால் இணைந்து சந்தோசம் பூத்துக்குழுங்கும் மணவாழ்க்கையாக கணவன் மனைவி வாழ்க்கையை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே முதலில் தேவை என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top