கருவறைப் பாடங்கள்

“கருவறையை அமைதியும் அறிவும் நிறைந்த ஒரு பூங்காவனமாக
பலவற்றைக் கற்றுக்கொள்ளக்கூடிய கலாசாலையாக ஆக்கிக்கொள்வோம்”

• என் குழந்தைக்கு கருப்பையில் கற்றுக்கொள்ள முடியுமா?
• என் குழந்தை கருப்பையில் எவ்வாறு கற்கிறது?
• என் குழந்தை கருப்பையில் கற்றுக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?

கருப்பை குழந்தைக்கு ஒரு உணர்ச்சிகரமான விளையாட்டு மைதானம்.
சுமார் 10 வாரங்களிலிருந்து குழந்தை தன் சிறிய கைகால்களை அசைத்து நீட்டுகின்றது.
23 வாரங்களை அடைந்ததும் தாயின் குரலையும் பிற ஒலிகளையும் கேட்க முடிகிறது.
கருப்பையில் அதிகம் நகர்வதன் மூலம் கேட்கும் விடயங்களுக்கு இன்னும் கூடுதலாக பதிலளிக்க முடிகிறது.
மேலும் தாய் தன் வயிற்றை தொடும்போது பதிலளிக்கவும் செய்கிறது.

இதுபோன்ற அனுபவங்களின் மூலமே குழந்தை பிறந்த பிறகு வாழ்க்கைக்குத் தயாராகிறது.ஒரு சூழலிருந்து மற்றொரு சூழலுக்கு தயாராகும் ஒரு நிகழ்வாகவே இது இருக்கிறது.

கருவில் உள்ள குழந்தை நோவு, தொடுகை, சப்தம், குளிர், வெளிச்சம் என்பவற்றுக்கு பதில் அளிக்கவும் விக்கல் விடவும் விரல் சூப்பவும் கண்சிமிட்டவும் உறங்கவும் செய்கிறது என ஒல்லாந்து பல்கலைக்கழக பேராசிரியர் வில்லியம் லிலி குறிப்பிடுகிறார்.

கருவறையில் உள்ள குழந்தையால் தாயிற்கு ஏற்படும் பல்வேறு விதமான மனநிலை மாற்றங்களை உணர்ந்து கொள்ள முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கவலை, பயம், மனஅழுத்தம், அச்சம், சந்தோசம் போன்ற தாய் அனுபவிற்கும் உணர்வுகளின் தாக்கத்தைக்கூட கருவிலுள்ள குழந்தைக்கு உணர முடியும் என மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

‘கருவுற்ற நேரத்திலிருந்து ஆரம்பிக்கும் உணர்வே குழந்தையாகும்’ என வைத்தியர் “பிரேடரிக் லெபோய்” எனும் மேல் நாட்டு மருத்துவர் தனது “வன்முறையற்ற பிறப்பு” எனும் நூலில் குறிப்பிடுகிறார்.

கருவுற்ற காலத்திலிருந்து தாயின் உணர்வுகள், எண்ணங்கள் செயற்பாடுகள், தாயிற்குக் கிடைக்கும் அன்பு, ஆதரவு, மதிப்பு போன்ற அனைத்தும் குழந்தையின் ஆரோக்கியமான விருத்திற்கு காரணமாக அமைகிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

கருவில் இருக்கும் குழந்தை தாயின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. அதனால் தாயின் ஒவ்வொரு செயற்பாடும் குழந்தையின் விருத்திற்கு சாதகமானதாக அமைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பிற்கு தாயும், அவளுக்குத் துணையாக மற்றவர்களும் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

மிகச் சிறந்த மானிடப்பண்புகள் குழந்தையில் உருவாக்குவதற்கான ஆரம்ப இடமாக கருவறை காணப்படுகிறது. கருவறையை அமைதியும் அறிவும் நிறைந்த ஒரு பூங்காவனமாக, பலவற்றைக் கற்றுக்கொள்ளக்கூடிய கலாசாலையாக மாற்றியமைத்துக் கொண்டால் ஆசையோடும் ஆர்வத்தோடும் உலகிற்கு முகம் கொடுக்கக்கூடிய குழந்தையை, ஆரவாரமாக உலகை பார்க்கக்கூடிய குழந்தையை பெற்றெடுக்கவும் உலகில் அமைதியாக வாழ்வதற்கு தயாரான குழந்தையாக மாற்றவும் எங்களால் முடியும்

ஒரு பெண் கருவுற்ற பின்னர் மகிழ்ச்சியும் சந்தோசமும் நிறைந்த உணர்வுகளை கருவில் உள்ள குழந்தைக்கு கொடுப்பது முக்கியமாகும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

சந்தோச உணர்வுகள் கர்ப்பவதியின் மனதை நலமாக மாற்றி அழகான சிந்தனையோடு வாழவும் வாழ்க்கையின் கோரிக்கைகளை பூர்த்திசெய்து வாழவும் வழிவகுக்கின்றன. ஒரு பெண் கருவுற்று இருக்கும் போது அவள் மனம் நலமாக இருப்பதற்கும் உடல் ஆரோக்கியம் அடைவதற்கும் கருவுற்ற குழந்தை நலம் அடைவதற்கும் சந்தோச உணர்வுகள் மிகவும் அவசியப்படுகின்றன.

‘எதிர்மறையான மனப்பாங்கோடும் அதீத கவலையோடும் ஒரு கர்ப்பவதி இருந்தால் அது அவளது உடல் நலத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதுடன் இன்னும் கருவுற்ற குழந்தைக்கு ஒரு அபாய எச்சரிக்கை செய்தியாகவும் அமைந்துவிடலாம்’ என்று எக்ஸஸ் பல்கலைக்கழக விஞ்ஞானப்பிரிவின் மகப்பேற்று பேராசிரியர் அய்ரின் அகார் என்பவர் குறிப்பிடுகிறார்.

எதிர்மறை உணர்ச்சிகள் கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் நலம் பாதிக்கப்பட காரணமாகின்றன என்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது.

‘தாயின் எண்ணங்கள் கருவிலுள்ள குழந்தையுடன் உடல் ரீதியான தொடர்புகளைக் கொண்டுள்ளன. நீங்கள் ஒரு கர்ப்பமுற்ற தாயாக இருந்தால் உங்கள் எண்ணங்களும் உணரும் உணர்ச்சிகளும் நரம்பு ஹோமோன்கள் மூலம் குழந்தைகளுக்குக் தொடர்புபடுத்தப்படுகிறது’ என்று தோமஸ் வெனி எனும் ஆங்கில மருத்துவர் குறிப்பிடுகிறார்.

அதாவது தாய் சோகத்தை உணரும் போது குழந்தை சோகத்தை உணர்கிறது. தாய் சந்தோசமாக இருக்கும் போது குழந்தை சந்தோசமடைகிறது. இப்படி தாயின் ஒவ்வொரு உணர்வுகளும் குழந்தையை சென்றடையலாம். எனவே தாயின் ஆரோக்கியம் அவளது சந்தோசமான எண்ணங்கள் மகிழ்ச்சியான கற்பனைகள் அமைதியான உணர்வுகள் போன்ற அனைத்தும் குழந்தை பிறக்க முன்பே அதன் விருத்தியில் அல்லது தனிப்பண்பில் ஏதோ வித்தில் தாக்கம் புரிவதை எம்மால் இலகுவாகப்புரிந்துகொள்ள முடியும்.

கருவுற்ற தாயின் எண்ணங்களை, செயற்பாடுகளை, அவள் உடலை சரிபடுத்துவது என்பது அவள் கருவில் வளரும் குழந்தையை சரிபடுத்துவதாகவே இருக்கும்.

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கொரிய மக்கள் கருவில் உள்ள குழந்தைக்கு கல்வி கொடுக்கப்படவேண்டும் என்று எண்ணி “கருவில் கல்வி முறை” ஒன்றை அறிமுகப்படுத்தி வருகின்றனர். குழந்தையின் வாழ்க்கை தாய் கர்பமுற்றதிலிருந்து ஆரம்பமாகிறது என்றும் பிறந்த குழந்தை ஒரு வருடத்தை அடைந்துவிட்டது என்றும் அவர்கள் கருதுகிறார்கள். அதனால் கருவுற்ற காலத்திலிருந்து பிள்ளையை பிரசவிக்கும்வரை தாயிற்கு ஒரு வகை பயிற்சி கொடுக்கப்படுகிறது. அந்தப் பயிற்சிக்கு கொரிய மொழியில் “டைகியோ” எனச் சொல்லப்படும். “டை” என்பது கர்ப்பப்பையையும் “கியோ” என்பது போதித்தல் என்பதையும் குறிக்கும். அப்படியானால் “கர்ப்பகாலப் போதனை” என்று இதை அழைக்கலாம். இன்று கூட அங்குள்ள இளம் தாய்மார்களுக்கு கர்ப்பகாலப் போதனை வழங்கப்படுகின்றது.

தாய் கருவுற்று இருக்கையில் அவள் உணர்வுகளை சந்தோசமாக ஆக்குவதுடன் அவளுக்கு உதவி ஒத்தாசையாக இருக்க வேண்டியது குறிப்பாக தந்தையின் மிகப் பெரிய பொறுப்பாகும். அப்படி அந்தப் பொறுப்பை மனநிறைவோடு செய்ய ஆரம்பித்தால் கருவைச் சுமப்பது தாய் மட்டுமல்ல தந்தையும் சேர்ந்தே என்ற சந்தோசஉணர்வு இருவருக்கும் ஏற்பட்டு அழகான ஆரோக்கியமான மனிதனை இந்த மண்ணுக்கு அர்ப்பணிக்க துணைபுரிந்த பாக்கியசாலிகளாக ஆகலாம்.

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top