சுயமரியாதை

நாம் மற்றவருக்கு மரியாதை செலுத்துவதன் அவசியம் பற்றி கதைக்கிறோம். மரியாதையின் தேவையை அதன் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு விளங்க வைக்கிறோம். மரியாதை செலுத்துவதன் அவசியம் பற்றி பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கின்றோம். ஆனால் எமக்கு நாம் மரியாதை செலுத்துவதை பல சந்தர்ப்பங்களில் மறந்து விடுகிறோம்.

ஒருவர் அவர் மீது செலுத்தும் மரியாதையை அல்லது கௌரவத்தை சுயமரியாதை என்று அழைக்கப்படுகிறது. நாம் நம்மீது மரியாதை செய்ய வேண்டுமா?
நாம் நம்மீது கௌரவம் செலுத்த வேண்டுமா? என்ற கேள்விகள் சாதாரணமாக எமக்குள் உருவாகலாம். இது பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்ள முயற்சிப்போம்.

மனோதத்துவ வல்லுநர்கள் சுயமரியாதையை பல வழிகளில் வரையறுத்துள்ளனர். குறிப்பாக, சுய மரியாதை என்பது அல்லது நாம் எம்மீது மரியாதை செலுத்துவது என்பது
▪️எங்கள் தேவைகள் மற்றும் ஆசைகளை மதிப்பது,
▪️எங்கள் மதிப்பைப் புரிந்துகொள்வது
▪️எங்கள் கண்ணியத்தை பாதுகாத்துக்கொள்வது
▪️எங்களுக்கு அவசியமான தேர்வுகளை தெரிவுசெய்வது
▪️ எங்கள் தனித்துவத்தின் தன்மையை புரிந்து அதை மதித்து வாழ்வது
என்று வரையறுத்து கூறுகின்றனர்.

சுயமரியாதை ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியமானது, ஏனெனில் இது சவால்களை சமாளிக்கவும்,
மன தைரியாத்தை உருவாக்கவும்,
உணர்ச்சி ஆரோக்கியத்தை பராமரிக்கவும்
பெரிதும் உதவுகிறது.

சுயமரியாதை என்பது நாம் எம்மை எவ்வளவு புரிந்து கொள்கிறோம் மற்றும் எம்மை எவ்வளவு கவனமாக பராமரிக்கிறோம் என்பவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது என்று ஆராய்ச்சிகள் எடுத்துக் காட்டுவதை காணலாம்.

எங்களை உண்மையான முறையில் நேசிப்பது,
எங்களை கவனமாக நடத்துவது
எங்கள் மதிப்புகளுக்கும் நடத்தைகளுக்கும் உண்மையாக இருப்பது எல்லாம் சுயமரியாதையில் அடங்கும் முக்கிய அம்சங்களாகும்.

எங்கள் நம்பிக்கைகள் மற்றும் மதிப்புகளுக்கு இசைவாக எவ்வளவு உண்மையாக ஈடுபடுகிறோமோ அவ்வளவு அதிகமாக நாங்கள் நிறைவாகவும் நம்பிக்கையுடனும் இருக்கத் தொடங்குவோம். இதுதான் எங்கள் நல்வாழ்வை மேம்படுத்தும் அத்திவாரமாகும்.

எங்களை நாம் மதிக்கும்போது எங்களையும் எங்கள் வாழ்க்கையையும் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதில் இருந்து தவிர்ந்து கொள்கிறோம். எங்கள் இயல்பான நிலையை புரிந்து கொள்கிறோம்.
எங்கள் வாழ்க்கையின் பொருள் புரிந்து வாழ முயற்சிக்கிறோம்

எம்மீது நாம் மரியாதை காட்டுவதை அகங்காரமாக நினைகக் கூடாது. மாறாக, இது மனிதர்களாகிய எங்களுக்கு ஆரோக்கியமான எல்லைகளை நிறுவவும், எதிர்மறை எண்ணங்களை விலக்கி வைக்கவும், எங்களை நாம் உயர்வான மேன்மையான மனிதர்களாக பார்க்கவும் எங்களை தெரிந்து, காத்து, கவனித்து அழகாகவும் ஆரோக்கியமாகவும் வாழ வழிகாட்டும் உயர்ந்த நிலையாகும்.
➖➖➖

✒️அஸ்ஹர் அன்ஸார்
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்
Back To Top