வாழ்க்கையில் சவால்கள், சங்கடங்கள், இழப்புகள் தவிர்க்க முடியாதவை. இவற்றை கண்டு ஓடி ஒளியவோ, முகம் கொடுக்க பயந்து வாழ்க்கையை மாய்த்துக் கொள்ளவோ தேவையில்லை.
நாம் அனைவரும் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழவே இந்த உலகிற்கு வந்திருக்கின்றோம். வாழ்க்கையை பயனின்றி வாழவும் சங்கடங்களை சந்திக்க வேண்டி ஏற்படும் போது அவற்றை சந்திக்க முயற்சிக்காமல் வாழ்க்கையை அழித்துக்கொள்ள எமக்கு எந்த வகையிலும் அதிகாரம் தரப்படவில்லை.
ஆனால் சிலர் பல்வேறு காரணங்களால் வாழ்க்கையை மாய்த்துக் கொள்வதை அல்லது தற்கொலை செய்து கொள்வதை நாம் அடிக்கடி பார்க்கிறோம் அல்லது கேள்விப்படுகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் உலகில் சுமார் 703 000 பேர் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள், மேலும் பலர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள் என உலக சுகாதார அமைப்பு தகவல் தருகிறது.
ஒவ்வொரு தற்கொலையும் குடும்பங்களை, சமூகத்தை, முழு நாட்டையும் பாதிக்கும் ஒரு சோகம் நிறைந்த செயலாகும். அத்தோடு தனது உறவுகள் மீது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தவும் செய்கின்றது.
2019 இல் உலகளவில் 15-29 வயதுடையவர்களிடையே இறப்புக்கான நான்காவது முக்கிய காரணமாக தற்கொலை இருந்து இருக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான விடயம் அல்ல. இளம் பிராயத்தில் உள்ளவர்கள் இப்படி பிழையான அவ்வாறே அவசரமான முடிவுகள் எடுப்பதற்கான காரணங்களை கண்டு பிடித்து அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ள துணைபுரிவது ஒரு அவசர தேவையாக இருக்கிறது.
வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள், வறுமை கோட்டுக்கு உட்பட்ட நாடுகள் என தற்கொலைகள் உலகின் அனைத்து நாடுகளிலும் நிகழ்கின்றன.
2019 இல் 77% க்கும் அதிகமான உலகளாவிய தற்கொலைகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் நிகழ்ந்தன என உலக சுகாதார நிறுவன தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நாட்டுக்கு நாடு காரணங்கள் வேறுபடலாம்.
காரணங்கள் என்னவாக இருந்தாலும் தற்கொலை ஒரு தீவிர பொது சுகாதார பிரச்சனை மட்டும் இன்றி ஒரு பாரிய சமூக பிரச்சனையுமாகும்.
வாழ்க்கையில் சவால்கள், சங்கடங்கள், இழப்புகள் தவிர்க்க முடியாதவை. இவற்றை கண்டு ஓடி ஒளியவோ, முகம் கொடுக்க பயந்து வாழ்க்கையை மாய்த்துக் கொள்ளவோ தேவையில்லை. இருந்தாலும் இவற்றுக்கு முகம் கொடுப்பதற்குத் தேவையான மன தைரியத்தை, சவால்களை சந்திக்கும் நுட்பங்களை, பிரச்சனைகள் தீர்க்கும் திறன்களை எமது பிள்ளைகளுக்கும் இளைஞர்களுக்கும் கட்டாயம் கற்றுக் கொடுக்க வேண்டியது தற்கால சமூகத்தின் அவசர தேவைகளில் ஒன்றாகும்.
தற்கொலைத் தடுப்பு முயற்சிகளுக்கு சுகாதாரத் துறை, கல்வித்துறை, நீதித்துறை, ஆன்மீகத் துறை, அரசியல், ஊடகம் போன்ற துறைகள் உட்பட சமூகத்தின் பல துறைகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.