தவறான புரிதல்கள்

தவறான புரிதல்கள்

தொடர்பாடல் என்பது மனித வாழ்வின் அடிப்படையாகும். சிறந்த தொடர்பாடலில் இருந்து தான் சிறந்த உறவுகள் தோற்றம் அடைகின்றன. ஆரோக்கியமான தனிப்பட்ட உறவுகளை, குழு உறவுகளை வளர்ப்பதற்கான ஒரு கருவியாக இருப்பது சிறந்த தொடர்பாடல்.
இது எம்மிடம் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான திறனாகும். ஆனால் துரதிருஷ்டவசமாக இது நம்மில் பலருக்கு இருப்பதில்லை, இதன் விளைவாக நாம் தவறான புரிதலின் எளிதான இலக்குகளாக இலகுவாக மாறி விடுகிறோம். “நான் அதைச் சொல்லவில்லை, நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டீர்கள்” என்று மக்கள் சொல்வதைக் வழக்கமாக கேட்டுப் வருகிறோம்.

யாரையாவது அல்லது எதையாவது தெளிவாகப் புரிந்து கொள்ளாததன் விளைவு தவறான புரிதல்.

கருத்து வேறுபாடு, கருத்து முரண்பாடு எல்லாம் இந்த தவறான புரிதல்களின் மற்றுமொரு மூலமாகும்.

நாம் மற்றவர்களை எப்படி, ஏன் தவறாகப் புரிந்துகொள்கிறோம் மற்றும் மற்றவர்களால் ஏன் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறோம் என்பதை விளக்கும் பல காரணிகள் இருக்கலாம்

வீட்டிலும் சரி. பணியிலும் சரி தவறான தகவல் தொடர்புகள் அடிக்கடி நிகழலாம், இது தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கலாம். அதன் பின்னர் மோதல்கள், பிரிவுகள் போன்ற தகாத விளைவுகளை ஏற்படுத்தலாம்.
கடைசியாக இது முன்னேற்றத்திற்கும் உற்பத்தித்திறனுக்கும் பல தீங்குகளையும் விளைவித்து விட காரணமாகலாம்.

தவறான தகவல்தொடர்புகளுக்குப் பின்னால் உள்ள பொதுவான காரணங்களைப் புரிந்துகொள்வது முக்கியமானது.

▪️வேலையில் தவறான தொடர்பாடல்கள்
▪️தெளிவற்ற தகவல்கள் பரிமாற்றம்
▪️விடயங்களை சரியாக செவிமடுக்கும் திறன் இல்லாமை
▪️ அப்படி இருக்குமமோ.. இப்படி இருக்குமோ… என்று அனுமானித்தல்
▪️மொழி மற்றும் வசனத் தடைகள்
▪️தொழில்நுட்பக் கோளாறுகள்
▪️பிழையான செய்திகளை ஆராயாமல் நம்புதல்
போன்ற விடயங்களை குறிப்பிடலாம்.

தவறான புரிதல்கள் மனித தொடர்புகளில் அடிக்கடி நிகழலாம், ஏனென்றால் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கைச் சூழ்நிலைகளை வைத்தே விடயங்கள் பற்றி நேக்குகிறார்கள், அவ்வாறே அவற்றை முன்வைக்கவும் முற்படுகிறார்கள்.
நமது வாழ்க்கை அனுபவங்கள், அடிப்படை நம்பிக்கைகள் ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ளும் முறைகள் எல்லாம் நபருக்கு நபர் மாறுபடும்.

பணியிடத்தில் உள்ள தவறான புரிதல்களை எவ்வாறு தீர்ப்பது என்பதைக் கற்றுக் கொள்வதும் அது பற்றி ஆழமாகவும் அறிவுபூர்வமாகவும் சிந்தித்து சரியான முடிவுகளை எடுப்பதற்கான நுட்பங்களை தேடித் தெரிந்து கொள்வதும் ஒரு பணியாளரின் பொறுப்பாகும்.

அதேவேளை தவறான புரிதல்களால் ஏற்படும் மோதலைத் தீர்க்கும் நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள எங்களுக்கு உதவக்கூடியவர்களிடம் பேசித் தெரிந்து கொள்வதில் நாம் பின்வாங்கி நிற்கவும் கூடாது. தவறான புரிதல்களை அழகாக வெற்றி கொண்ட பல அனுபவசாலிகள் எங்கள் அருகில் இருக்கலாம்.
▪️▪️▪️▪️▪️
அஸ்ஹர் அன்ஸார் FRSPH (UK)
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்
Back To Top