ஒரு தாய் இன்னொரு பிள்ளைக்கு தாயாகிறாள்
இறைவனின் அருற் பிரதிநிதியை சுமக்கும்
பாக்கியத்தால் அலங்காரமாகிறாள்
அதை அவளது இன்னொரு பிள்ளை காண்கிறது
தாயின் தாய்பேற்று மாற்றங்களை கண்திறந்து பார்க்கிறது
அது அவள் பரிசளித்த முதற்பிள்ளை
சுறுசுறுப்பாய் கலகலப்பாய் இருந்த தாயின் உடல்
இப்போது அசந்து போவதை பார்த்து
பிள்ளை மனம் வெதும்பிப் போகிறது
விரும்புவதை உண்ணவும் குடிக்கவும் முடியாமல்
விரும்பியவாறு அமரவும் தூங்கவும் முடியாமல்
விரும்புகிற இடம் போகமுடியாமல்
தாயானவள் தன் உடலை – தன் உணர்வுகளை
அர்ப்பணித்துக் கொண்டே
தாய்மையின் சுகத்தை அனுபவிக்கிறாள்
என்று பிள்ளை உள்ளத்தால் உருகிக்கொள்கிறது
அதனுள் அனுமதியில்லாமலே பெருமூச்சு அசைபோடுகிறது
கணவன் பக்கத்தில் இருப்பது
தன் உடல் வலிக்கு அருமருந்தாய் இருக்குமே..!
என்று தாய் உணர்வதை அந்த பிஞ்சு மனமும் உணர்கிறது
என்னையும் இப்படித்தானே சுமந்து பெற்றிருப்பாள்
என்று ஏக்கம் கொள்கிறது
தாயின் ஈரைந்து மாத அர்ப்பணத்தில் தானும் சேர்ந்து
வரப்போகும் குட்டிஉறவை வரவேற்கக் காத்திருக்கிறது
குட்டிஉறவு குடும்பத்தை வசந்தமாக்கப்போகும்
செவ்வந்திப் பூ என்று கனவு காண்கிறது
ஒருநாள் தனது குடும்ப நந்தவனத்தில்
ஒரு சின்னச் செவ்வந்தி பூப்பதை கண்டு
அந்த சில்வண்டு அதை சுற்றி உலாவருகிறது
தொட்டுப்பார்க்கிறது
விளையாட அழைக்கிறது
விளையாடுகிறது
காற்றுக்கும் கடும் மழைக்கும்
புழுக்களுக்கும் பூச்சிகளுக்கும்
முகம்கொடுத்துத்தான்
பூஞ்செடி முளைக்கிறது
மொட்டாகி பூவாகிறது
பூவாகி மணம் வீசுகிறது என்பதை
தாயின் சோர்வில்லாத வளர்ச்சியை
வாடாத மலர்ச்சியை பார்த்து
பாடம் படிக்கிறது
தாயின் தாய்பேற்றின் மகத்துவத்தை
புரிந்துகொள்கிறது
தாயே நீ
நிபந்தனையற்ற அன்பின் வடிவம்
நீ ஒரு அதிசய தொழிலாளி
நீ கடவுளின் கருணையின் வெளிப்பாடு
நீ மகிழ்ச்சியை தரும் மகிழ்ச்சி
நீ எங்கள் வெற்றிக்காக கனவு காணும் உரிமைக்காரி
தாயே…! திடமாக இரு…!
உண்
கனவின் பின்னால் ஓடி
கனவை மலரச் செய்வோம்
என்று அந்த இளமொட்டுகள்
இதழ்களைத் திறந்துகொள்கின்றன