“பயணம் தெளிவானால் பாதையும் தெளிவாகும்”
நாம் வாழ்க்கையில் இலக்குகளுடன் அல்லது எதிர்பார்ப்புகளுடன் நகர்கிறோம். அப்படி நகர்ந்தாலும் சிலசமயங்களில் அடைய ஆசைப்படுவதை அடைய முடியாது போகும் சந்தர்ப்பங்களை சந்திக்கிறோம். இன்னும் சில சமயங்களில் நம்மால் அடைய வேண்டியவற்றில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கிறோம். சில சமயங்களில் வாழ்க்கையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
நாம் என்ன செய்கிறோம் என்பதைச் சரியாக செய்யாததனாலும் என்ன செய்ய வேண்டும் என்பதை சரியாகத் தெரியாததனாலும் நாம் இவ்வாறான நிலைகளை சந்திக்க நேரிடுகிறோம். எங்கள் பார்வையும் பயணமும் தெளிவான நோக்கம் கொண்டதாக இருந்தால் மட்டுமே நாங்கள் திசை திரும்பாமல் போக வேண்டிய இடத்துக்கு போய் சேரலாம்.
சரியானதைச் செய்வதிலிருந்தும் பொருத்தமானதை தெரிவு செய்வதில் இருந்தும் மட்டுமே சிறந்த முடிவுகளை எடுக்கத் தேவையான அறிவு எமக்குள் உருவாகிறது. சரியானதை தெரிவுசெய்து, சரியானதைச் செய்வதன் மூலம் வரும் முடிவுகள் மிகவும் தெளிவாக இருக்கும்.
நாங்கள் தொடர்ந்து சரியானதைச் செய்வதற்கு எங்களை பழக்கப்படுத்திக் கொள்ளும்போதும் சரியானதை செய்வதற்கு தேவையான ஆதாரங்களை தேடும் போதும் எங்கள் பயணத்தின் முடிவெல்லையை மிகவும் இலகுவாக அடையலாம்.
வெற்றியை நோக்கிய பயணம் என்பது நாம் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அடுத்த படியை அடைவதற்காக உழைக்கும் செயல்முறையாகும், நாம் முன்வைக்கும் ஒவ்வொரு அடியும் எங்களைத் தூண்டி, தவறாமல் முன்னேறத்தை அடைய ஊக்குவித்துக் கொண்டே இருக்கும்.
வெற்றியை நோக்கி போகும் பயணம் ஒருபோதும் முடிவடையாத ஒரு அற்புதமான பயணம். அந்த பயணத்திற்கான உறுதியான அத்திவாரம் சரியானது எது, சரியானதை செய்வது எப்படி என்பதை தெரிவு செய்வதாகும்.
பயணத்தின் வெற்றி, நாம் ஏன் பயணிக்கிறோம் என்பதைப் பொறுத்தும் பயணத்தின் தன்மையை சரியாக புரிந்து கொள்வதிலும் தங்கியிருக்கிறது.
- சரியான பதிலைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் சரியான கேள்வியைக் கண்டறிவோம் என்பதில் உறுதியாக இருப்போம்….!
- போகவேண்டிய சரியான பாதையை கண்டு பிடித்து அந்தப் பாதையில் பயணம் செய்வோம்…!
- பழைய சிந்தனை முறைக்குள் விழுந்து விடாமல் வெற்றியைப் பற்றி வித்தியாசமாக சிந்திப்போம்….!
- இலக்கின்றி அலைவதற்குப் பதிலாக, நமது இலக்கையும் நோக்கத்தையும் புரிந்து பயணிப்போம்…!
“எங்கு செல்ல வேண்டும் என்று தெரியாத மாலுமிக்கு சாதகமான காற்று கிடைப்பதில்லை”
பயணம் தெளிவானால் பாதையும் தெளிவாகும்.