தொழிலை எப்படித் தெரிவுசெய்கிறோம்

தொழிலை எப்படித் தெரிவுசெய்கிறோம்
நாம் தெரிவு செய்யும் தொழில் அல்லது பெற்றுக்கொண்ட தொழில் பெரும்பாலும் மூன்று வழிகளில் தீர்மானிக்கப்படுகிறது. அப்படியாயின் தற்போதைய இளைஞராகட்டும் ,இளைஞர்களின் பெற்றோர்களாாகட்டும் எவராயிருப்பினும் அவரவர் தேர்ந்தெடுத்த தொழில் எந்த வகையில் அமைந்தது என்று பின்வரும் மூன்று முறைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

1.ஏற்கனவே குறிக்கப்பட்ட தொழில்

பல குடும்பங்களில் பெற்றோர் செய்து வரும் தொழிலை அல்லது பரம்பரையாக வரும் தொழிலை செய்யுமாறு இளைஞன் பணிக்கப்படுகிறான். வியாபாரம், கடைத் தொழில், விவசாயம், தோட்டப்பராமரிப்பு, தச்சு வேலை போன்று குடும்பத் தொழில்களில் இளைஞன் ஈடுபடுத்தப்படுகின்றான். விரும்பியோ விரும்பாமலோ வேறு வழியின்றி பெற்றோர் செய்யும் தொழிலை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு இளைஞன் ஆளாகிறான். இங்கு தொழிலை அவன் தெரிவு செய்துகொள்ளவில்லை. தெரிவு செய்யப்பட்ட தொழிலை செய்ய நேரிடுகிறான். இது ஏற்கனவே குறிக்கப்பட்ட அல்லது தெரிவு செய்யப்பட்ட தொழில் என்று அழைக்கப்படுகிறது.

2. விருப்பத்தைக் கைவிடுவதன் மூலம் கிடைத்த தொழில்

உயர்கல்வி கற்றிருந்தாலும் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருந்தாலும் வேலை வாய்ப்பு இல்லாததால் அல்லது குறித்த வயதில் தொழில் கிடைக்காததால் எந்த வேலை கிடைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு எமது இளைஞர்கள் தள்ளப்படுகின்றனர். இதில் பட்டம் பெற்றவர்களும் அடங்கலாம். பாடசாலை படிப்போடு வேறு துறைகளில் கல்வி கற்றவர்களும் அடங்கலாம். தகுதிக்குப் பொருத்தமான தொழிலை தெரிவு செய்வதைவிட வாழ்க்கையை ஓட்டுவதற்கு வேறு வழியில்லை என்பதால் கிடைக்கும் தொழில் எதுவோ அதை செய்ய நேரிடுகின்றார்கள். ஒரு ஆசிரியராக இருக்க வேண்டியவர் எழுதுவிளைஞராகவும் விரிவுரையாளராக இருக்க வேண்டியவர் காரியாலய ஊழியராகவும் ஆகிவிடுகின்றனர். இது விருப்பத்தை கைவிடுவதன் மூலம் ஏற்கும் தொழில் என்று அழைக்கப்படுகிறது.

3. உள்ளுணர்வால் உந்தப்பட்டு பெற்றுக்கொண்ட தொழில்

நம்மில் சில இளைஞர்கள் தமது விருப்பம், தகுதி போன்ற தனிப்பட்ட ஆசைகளை அறிந்து பொருத்தமான தொழிலை மேற்கொள்ள உள்ளுணர்வால் தூண்டப்படுகின்றார்கள். அத்தொழிலுக்கு தேவையான அறிவாற்றலை, பயிற்சிகளை எல்லாம் பெற்று தம்மைத் தயார்படுத்தி அந்தத் தொழிலையும் பெற்றுக்கொள்கிறார்கள். அதாவது தாம் எந்தத் தொழிலுக்குப் பொருத்தமோ அந்தத் தொழிலை அடைந்துகொள்கிறார்கள். இது உள்ளுணர்வு மூலம் கிடைக்கப்பெறும் தொழில் என்று அழைக்கப்படுகிறது.

உள்ளுணர்வு மூலம் ஒரு தொழிலைச் செய்வதற்கு ஒருவர் உந்தப்பட்டு அதற்கான அறிவை பயிற்சியை பெற்றிருந்தாலும் அதற்கான வாய்ப்பு கிடைக்காதவர்களும் நம்மில் இருக்கலாம். அப்படியானவர்கள் வேறு ஏதாவது தொழிலை வெறுப்புடன் ஏற்றுக்கொண்டு செய்தாலும் காலப்போக்கில் அந்தத் தொழிலை அவர்கள் விரும்பவும் செய்யலாம். இப்படி குடும்பத் தொழில் அல்லது ஏற்கனவே குறிக்கப்பட்ட தொழில், விருப்பத்தைக் கைவிடுவதன் மூலம் கிடைத்த தொழில், உள்ளுணர்வால்
உந்தப்பட்டு பெற்றுக்கொண்ட தொழில் போன்ற மூன்று வழிகளில் நாம் தொழிலைத் தெரிவு செய்கின்றோம்.

உயர்கல்விக்குச் செல்லாமல் கல்வியை இடையில் நிறுத்திக்கொள்ளும் மாணவர்கள், உயர்கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் போன்ற எல்லோரும் சமூகத்தின் வளமான வாலிபர்கள் ஆவர். அவர்கள் ஒவ்வொருவரும் தனக்குப் பொருத்தமானதொரு தொழிலை தெரிவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதை கல்வியின் ஒரு அங்கமாகவே கருத வேண்டும். எதைச் செய்ய ஒருவனுக்கு ஆற்றலும் ஆர்வமும் இருக்கிறதோ அதைச் செய்வதற்கான வழிகாட்டலை பெற்றுக்கொடுப்பதை வழிகாட்டலின் முக்கிய ஒரு கூறாகவும் ஆக்கிக்கொள்ள வேண்டும். பொருத்தமான துறைக்கு எமது இளைஞர்களை அனுப்பினால் அவர்கள் நாட்டின் பொருளாதார எழுச்சிக்கு பாதை காட்டக்கூடிய சாதனையாளர்களாகவும் மாறிவிடுவார்கள்.

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top