கவலை….?
ஏதேனும் அபாயத்தை அச்சுறுத்தலை சந்திக்க நேரிடும்போது எமக்குள் ஏற்படும் ஒருவகை சாதாரண உணர்ச்சிதான் கவலை என்பது.
நாம் அனுபவிக்கும் கவலைகளை…..
1. யாதார்த்தமான கவலைகள்
2. பயனுள்ள கவலைகள்
3. சாத்தியப்படாத கவலைகள்
4. பயன்தரா கவலைகள்
என நான்கு வகைகளில் பிரித்து நோக்கலாம்.
1. யாதார்த்தமான கவலைகள்
சில கவலைகள் யாதார்த்தமானவை. முகம் கொடுப்பதிலிருந்து தவிர்க்க முடியாதவை. நிகழக்கூடிய விடயங்களால் உருவாகும் கவலைகளே யதார்ததமான கவலைகள் எனப்படுகின்றன.
தொற்று நோயொன்று பரவி வருவது பற்றிய செய்தி காதுகளுக்கு விழும் போது ஒரு அச்சம் கலந்த கவலை எமக்கு ஏற்படுவதைக் காண்கிறோம். அவ்வாறே இளைஞர்களுக்கு மத்தியில் போதைப்பழக்கம் பரவி வருவதை கேள்விப்படும் பொழுது இயல்பாகவே எமக்கு கவலை ஏற்படுவதை உணர்கிறோம். இக்கவலைகள் யதார்த்தமானவை. இவ்வாறான கவலைகள் எமக்கு வரக்கூடாதென்றோ அவை சரியில்லை என்றோ எம்மால் சொல்ல முடியாது.
2. பயனுள்ள கவலைகள்
சில கவலைகள் எமக்கு பயனுள்ளவையாக இருக்கின்றன. பயனுள்ள கவலைகள் எம்மை தொந்தரவுபடுத்தும் போது அவற்றால் நாம் ஒன்றை செய்வதற்கு அல்லது அடைவதற்கு ஊக்கம் ஊட்டப்படுகிறோம். உதாரணமாக ஒரு மாணவன் தனது வகுப்பு நிலையைப் பற்றி கவலைப்படுகிறான் என வைத்துக்கொள்வோம். அக்கவலை அவனை படிப்பதற்கும் பரீட்சையில் சித்தியடைவதற்கும் உற்சாகம் ஊட்டுவதாக அமைந்துவிடும்.
அவ்வாறே ஒருவர் புகைப்பிடிப்பது பற்றி கவலைப்படுகிறார் என்றால் அது அவரது உடலாரோக்கியத்தை பாதுகாக்கத் துணைபுரியும் உந்துதலாக அமைந்துவிடும். இவ்வாறான கவலைகள் ஆக்க பூர்வமான மாற்றங்களை எற்படுத்த வாய்ப்பாக மாறிவிடும்.
3. சாத்தியமற்ற கவலைகள்
சில கவலைகள் நடைமுறையில் சாத்தியம் அற்றவை. உதாரணமாக பூமியை ஒரு பெரிய கல் அல்லது வேறொரு கிரகம் தாக்கி உடைத்துவிடும். இன்னும் சில நாட்களில் உலகம் அப்படியே அழிந்த இல்லாமல் போய்விடும். பயங்கரமான ஏதாவது ஒன்று நடக்கும். நோய்கள் ஏற்பட்டு நாம் அழிந்து போய்விடுவோம். போன்றவாறு சந்தேகமான உணர்வுடன் எண்ணி கவலைப்படுவது இந்தவகை கவலையில் அடங்கும்.
4. பயனற்ற கவலைகள்
மக்கள் கவலைப்படும் சில விடயங்கள் அவர்களுக்கு எந்தவிதப் பயனையும் தராதவைகளாக இருந்தால் அவை பயனற்ற கவலைகளாக கருதப்படும். தனக்குப் பொறுத்தம் இல்லாத அல்லது தொடர்பு இல்லாதவை பற்றி கவலைப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். வேறொருவருடைய வாழ்க்கை விவகாரம் ஒன்றைப்பற்றி எண்ணி கவலைப்படும் மனிதர்களை நாம் கண்டிருப்போம். பிரச்சினைக்கு உட்பட்டவர் கூட கவலை கொள்ளமால் இருக்கலாம். ஆனால் அதை எண்ணி வேறொருவர் வருந்திக்கொள்வாரேயானால் அது பயனற்ற கவலையாக கருதப்படும்.
இங்கு குறிப்பிடப்பட்ட நான்கு வகைக் கவலைகளில் எம்மிடம் எந்தவகை கவலை இருக்கிறது என்பதை எண்ணிப்பார்த்துப் புரிந்துகொள்ளலாம். கவலை எந்த வகையைச் சார்ந்ததாக இருந்தாலும் சிலர் அளவுக்கதிகம் கவலைப்பட்டு உடலாலும் உள்ளத்தாலும் நொந்து போய் நோயாளிகளாக ஆகும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.