அவசரம் என்பது ஒரு விடயத்தை விரைவாகவும், வேகமாகவும், சில சமயங்களில் கவனக்குறைவாகவும் செய்வதை குறிக்கும்.
அவசரம் என்பது ஒரு விசுவாசியின் குணம் அல்ல. சிந்தித்து நிதானமாகவும் அழகாகவும் ஒன்றை செய்வது தான் ஒரு உறுதியான விசுவாசியின் குணமாக இருக்க வேண்டும்.
அமைதி என்பது அல்லாஹ்விடமிருந்தும், அவசரம் ஷைத்தானிடமிருந்தும் வருகிறது என்று நாம் படித்து இருக்கிறோம். அவசரம் ஷைத்தானிடம் இருந்து வருகிறது என்றால்…
அது மிகப் பெரிய தோல்விக்கு வழிவகுக்கும். மன வருத்தத்தைத் தரும்.
முன்செல்வதற்கும் முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கும். வேலையை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் ஒரு விடயத்தை அவசரமாக சொல்லி விட வேண்டும் என்ற ஆசையிலும் பலர் அவசரப்பட்டு பல தவறுகளை செய்கிறார்கள்.
அவர்களின் அவசரப்புத்தி எதோ ஒரு சிக்கலை உருவாக்கும் என்று அவர்கள் அப்போது நினைக்க மாட்டார்கள். அவசரம் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் சக்தியை கொண்டது.
▪அவசரம் ஒருவரை மற்றவர்கள் முன் சங்கடமாக உணர வைக்கும்.
▪மற்றவர்களுக்கும் மற்ற விடயங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
▪அவசரம் காரணமாக, ஒரு நபர் தனது சொந்த உரிமைகளை கூட இழக்க நேரிடும்.
▪சில நேரங்களில், அவசரம் காரணமாக, கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடும்.
▪மிக நல்ல உறவுகளைத் கூட இழக்க வேண்டி வரும்.
மக்கள் அவசர முடிவுகளை எடுக்கும்போது, அவர்கள் அதிக தவறுகளை செய்வார்கள்
அல்லது அறியாத தவறுகளை செய்வார்கள்.
குரங்குகளை வைத்து மேற்கொண்ட ஒரு புதிய ஆய்வு இப்படி விளக்குகிறது: மூளை செல்கள் புதிய தகவல்களுக்கும், மோசமான தகவல்களுக்கும் அதிக உணர்திறன் கொண்டதாக மாறி, தவறான முடிவுகளை எடுக்க எமக்குள் விருப்பத்தை ஏற்படுத்துகிறது.
நாம் விடயங்களை மிக விரைவாகச் செய்ய முயற்சிக்கும்போது, நாம் அதிக பிழைகளைச் செய்கிறோம், பின்னர் மெதுவாக அல்லது நிதானமாக செய்யும்போது நாம் மிகவும் துல்லியமாக இருக்க முனைகிறோம் என்று வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானி ரிச்சர்ட்
ஹெய்ட்ஸ் கூறுகிறார். நாங்கள் விரைவான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தல்லப்படும்போது எங்கள் மூளை விடயங்களை வித்தியாசமாகப் பார்க்கிறது. என்று கூறுகிறார்.
சுருக்கமாகச் சொன்னால், அவசரம் பல பிரச்சனைகளுக்குக் காரணமாகிறது.
நாம் எதைச் செய்தாலும் அவசரப்படாமல் நிதானமாகச் செய்ய வேண்டும். திருமணம், படிப்பு, வேலை, வியாபாரம், வழிபாடு, குழுப்பணிகள் என எதுவாக இருந்தாலும் அவசரப்படாமல் அமைதியாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
பதறிய காரியம் சிதறிப் போகும் என்ற பழமொழியை பலதடவை நாம் படித்திருப்போம். பதட்டமாக இருக்கும் போது எதையும் சரியாக யோசிக்க நம் மூளை நமக்கு இடம் தருவதில்லை. நம் உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தவும் வாய்ப்பு தருவதில்லை. தவறான, பிழையான முடிவுகளை எடுக்க அவசரம் தூண்டுதலாக இருக்கிறது என்பதால் நிதானமாகவும் அமைதியாகவும் செயற்பாட நாம் எம்மை பழக்க வேண்டும்.