பிள்ளைகளை வளர்ப்பதா? வளர வழிகாட்டுவதா?

நாம் ஒவ்வொரு நாளும் நம் பிள்ளைகளின் நினைவாகத்தில் ஏதோ ஒன்றை வைப்புச் செய்கிறோம்.

ஒரு குட்டி உதாரண கதை மூலம் பிள்ளை வளர்ப்பின் தன்மையினை நாம் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.

ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரும் பொறியியலாளர் ஒருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர்.
அவர்கள் இருவரும் தங்கள் வீட்டுத்தோட்டத்தில் ஒரே விதமான தாவரங்களை நட்டினர்.
ஆசிரியர் தனது தாவரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பசளையும் இட்டு கவனித்து வந்தார்.
பொறியியலாளர் அதற்கென்றே நேரத்தை ஒதுக்கி நன்கு நீர் ஊற்றி நல்லரக பசளையும் இட்டு அதிக அவதானம் செலுத்தி கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார்.
ஆசிரியர் நட்டிய தாவரங்கள் சாதாரண அளவில் பார்ப்பதற்கு அழகாக வளர்ந்தன.
பொறியியலாளரின் தாவரங்கள் கண்களை ஈர்க்கும் விதத்தில் அடர்த்தியாகவும் செழிப்பாகவும் வளர்ந்து இருந்தன.

ஒரு நாள் இரவு சிறிய புயற்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சேதம் ஏதும் நடந்திருக்குமோ என்று பார்க்க அடுத்த நாள் காலை பொறியியலாளர் தனது தோட்டத்திற்கு ஓடிச்சென்றார். அவரின் தாவரங்கள் வேர்களுடன் பிடுங்குண்டு வீசப்பட்டவாறு மண்ணில் விழுந்து கிடந்தன. அதை கண்டு அதிர்ச்சியும் கவலையும் அடைந்தார்.
அதேநேரம் ஆசிரியர் நட்டிய தாவரங்கள் எந்தவித சேதமும் அடையாமல் உறுதியாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.
‘நாம் இருவரும் ஒரே விதமான தாவரங்களை ஒன்றாகவே வளர்த்தோம். நீங்கள் கவனித்ததைவிட பலமடங்கு நன்றாக எனது தாவரங்களை கவனித்து வந்தேன். அதிகமாக நீர் விட்டேன். நல்லரக பசளையும் விட்டேன். இருப்பினும் எனது தாவரங்கள் வேர்களுடன் பிடுங்குண்டு விழுந்து கிடக்கின்றன. உங்களுடைய தாவரங்களால் மட்டும் ஏன் உறுதியாக நிற்க முடிகிறது. அது எப்படி சாத்தியம்? என்று ஆசிரியரைக் கேட்டார்.’

ஆம்…! நீங்கள் உங்கள் தாவரங்களுக்கு அதிகமாகவே கவனம் கொடுத்தீர். தேவையான அனைத்தையும்
தேவைக்கு அதிகமாகவே செய்தீர். அதனால் அவற்றுக்குத் தேவையானவற்றை அவற்றால் தேடிப்பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. அதாவது அவை வளர்வதற்கு அனைத்தையும் எளிதாக்கிக் கொடுத்தீர்.
நான் எனது தாவரங்களுக்கு தேவையான நேரத்தில் மட்டும் நீர் விட்டேன். அவற்றின் வேர்கள் நீரை தேடிக்கொள்வதற்கான அவகாசத்தையும் ஏற்படுத்தினேன். அதன் காரணமாக அந்த வேர்கள் மண்ணில் ஆழமாக பரந்து சென்று அவற்றின் நிலையை வலிமையாக்கிக்கொண்டன. அதனால் எனது தாவரங்கள் பாதிக்கப்படாமல் பிழைத்துவிட்டன. என்று புன்னகையுடன் விளக்கமாகப் பதில் கொடுத்தார்.

அன்பர்களே..!
பிள்ளை வளர்ப்பும் இப்படித்தான் அமைய வேண்டும். பிள்ளைகளும் தாவரங்கள் போன்றவர்கள். அவர்களுக்கு எல்லாமே வழங்கப்பட்டால் அவர்கள் தங்கள் வளர்ச்சிக்காக செய்ய வேண்டிய பல கடின உழைப்புகளை புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே வளர்த்துக்கொள்ளவும் பாதுகாத்துக்கொள்ளவும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.
நாம் அவர்களது தேவைகளை நிறைவேற்றுவது போன்று சுயமாக வளர்வது எப்படி, அழகான மாற்றத்தை நோக்கி முன்னேறுவது எப்படி, என்பதற்கான வழிகாட்டலும் கொடுப்பதுவே சரியான பிள்ளை வளர்ப்பாக அமையும்.

எமது பிள்ளைகள் பல ஆற்றல்களோடும் அவர்களுக்கே உரித்தான மனோபவங்களோடும் குறிக்கோள்களுடனும் இந்த உலகிற்கு வருகிறார்கள். அதை நாம் புரிந்துகொள்வதுடன் பிள்ளைகளுக்கும் புரிய வைத்து அவர்களது இயல்பான தன்மையில் வளரவும் வாழவும் வழிகாட்டவேண்டும்;

பிள்ளைகள் வளரும் போது நாம் நடப்பதற்கு கற்றுக்கொடுப்பது போன்று அவர்களுக்கே உரித்தான பாதையில் பயணிக்கவும் காட்டிக்கொடுக்கத் தவறக்கூடாது.

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top