“பிள்ளைகளுக்கு முன்பான எம்முடைய தொடரான முரண்பாடுகள் தலைமுறை தலைமுறையாக நீண்டுசெல்லலாம்”
கணவன் மனைவி அல்லது தாய் தந்தை உறவின் போது முரண்பாடுகள் இயல்பாகவே நிகழக்கூடியவை ஆகும். முரண்பாடுகள் நிகழ்ந்து ஒருவர் மற்றவரோடு உடன்படாது இருக்கும் சந்தர்ப்பங்களையும் அவ்வாறே உரையாடி ஒன்றுபட்டு செயற்படும் சந்தர்ப்பங்களையும் பிள்ளைகள் பார்த்துப் பாடம் பெற்றுக் கொள்கின்றனர். முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் அவற்றின் போது அவசரப்பட்டு ஆவேசப்பட்டு முரண்பாட்டை வன்முறையாக, வார்த்தை மோதலாக வெளிப்படுத்துவதுதான் அசாதாரணமானது.
பெற்றோரின் உரையாடல்களை, அவர்கள் செயற்படும் முறைகளை பிள்ளைகள் பார்த்து, பெற்றோர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் அவர்கள் வாழும் இடம் எவ்வாறானது என்பதையும் தீர்மானித்துக்கொள்கிறார்கள். பெற்றோரின் தொடரான முரண்பாடுகளைப் பார்க்கும் போது முரண்பாடுகள் நிறைந்த சூழலில் வாழ வேண்டியிருக்கின்றதே என்ற மனக்கவலையும் பிள்ளைக்கு ஏற்படத்தொடங்குகிறது. இதை தண்டிக்காமலேயே தண்டிக்கப்படுகின்ற ஒரு நிலையாகக் கருதலாம்.
முரண்பாடுகளை முறையாகத் தீர்ப்பது என்பது பிள்ளைகளுக்கு முரண்பாடு தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கற்றுக்கொடுக்கும் அழகான உபாயமாகவே இருக்கும். பெற்றோர் மத்தியில் முரண்பாடுகள் எவ்வளவுக்கு குறைவாக இருக்குமோ அவ்வளவுக்கு பெற்றோர் பிள்ளை உறவில் விருத்தியும் நெருக்கமும் காணப்படும். முரண்பாடுகள் இயல்பாக ஏற்பட்டாலும், தவிர்க்கமுடியாதவையாக இருந்தாலும் அவற்றை பிள்ளைகளுக்கு முன் முறையாக கையாள்வதற்கான சில ஆலோசனைகளைத் தருகின்றோம்.
• பிள்ளைகளுக்கு முன் வாக்குவாதப்படுவதை தவிர்த்துக்கொள்வோம்
• முரண்பாடுகள் வரம்பு மீறினால் உடனடியாக நிறுத்திவிட்டு பிள்ளைகள் இல்லாத போது அதுபற்றிக் கதைப்போம்
• சிக்கல்களை, பிரச்சினைகளை பிள்ளைகள் பக்கத்தில் இல்லாதபோது கலந்தாலோசிப்போம்
• எப்பொழுதும் பிள்ளைகள் முன் அழகான நடத்தைகளை வெளிப்படுத்துவோம்
• ஒருவர் மற்றவரை ஆழமாகவும் அவதானமாகவும் செவிமடுப்போம்
• உடன்படாத நேரங்களில்கூட ஒருவர் மற்றவரின் உணர்வுகளை மதிப்போம்
• பிள்ளைகளுடன் அழகான உறவை வளர்க்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்போம்
• முரண்பாடுகள் ஏற்படுவதற்கு பிள்ளைதான் காரணம் என்று ஒருபோதும் அவர்களிடம் முறைப்படவோ அவர்களை குற்றம் சாட்டாமலோ இருப்போம்
• கணவன் மனைவி இருவருக்கும் மத்தியில் ஏற்படும் முரண்பாட்டை பிள்ளைகளுடன் கதைப்பதை, ஒருவர் மற்றவரின் குறைகளைச் சொல்லி பிள்ளைகளிடம் முறைப்படுவதை முற்றாக தவிர்த்துக் கொள்வோம்
பிள்ளைகளுக்கு முன்பான எம்முடைய முரண்பாடுகள் தலைமுறை தலைமுறையாக நீண்டுசெல்ல காரணமாகவும் அமைந்துவிடலாம். அதனால் பெற்றோர்களின் முரண்பாடுகளை முறையாகத் தீர்த்தால், அமைதியைக் கடைப்பிடித்து சமரசமாகச் செயற்பட்டால், உணர்வை மதித்து உறவு முறியாமல் நடந்துகொண்டால் முரண்பாடு தீர்க்கும் கலையை பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுக்கலாம். காட்டியும் கொடுக்கலாம்