(ஒரு கணவன் தன் வாரிசை சுமக்கும் மனைவிக்கு வழங்கும் வளமான வரிகள் இவை… மகிழ்ச்சியுடன் மனம்விட்டு பகிர்ந்து கொள்கிறோம் உங்களுடன் ….)
மனித வாழ்வினில் புனித காவியம் நீ…
சிறப்புக் கதாபாத்திரத்தில் பிறப்பெடுக்கும் கதாநாயகி நீ..
ஆண்மையினை சுமக்கும் பெண்மை நீ…
சுகத்துடனே அகத்தினில் சிசுவை ஏற்பவள் நீ…
பலவீனங்களை சுமந்து செலவீனங்களை தவிர்ப்பவள் நீ…
தூக்கம் துறந்து ஏக்கங்கள் சுமப்பவள் நீ…
விருப்பங்களை மறந்து வெறுப்புக்களை ஏற்பவள் நீ…
குடல் பிரட்டும் குமட்டல்களை உடல் முழுதும் உணர்பவள் நீ…
தப்பிக்க முடியாத வலிகளை ஓப்பிக்க யாருமின்றி தவிப்பவள் நீ…
நரம்புகளின் அதிர்வுகளை பிரம்படிகளாய் ஏற்பவள் நீ…
புதையலெடுக்கையிலே சிதைவடையாத மங்கை நீ…
என் இதயத்தில் நிறைந்த புன் சிரிப்பழகியே…!
வலிகளை சுமக்கும் உன் விழிகளை நேசிக்கின்றேன்.
வாரிசை சுமக்கும் உனக்காய் தேனிசை பாடுகின்றேன்…
உன் வலிகளை என்னால் சுமக்க முடியாததை உணர்கிறேன்…
ஆனால்…
உறுதியாய் கூறுகிறேன் இறுதிவரை உனை…
கண்ணின் மணியாய் என்னுல் சுமப்பேன்…