மணவாழ்வில் ஒருவரையொருவர் அவமரியாதை செய்வது அல்லது மரியாதை
கொடுக்காமல் நடந்து கொள்வது நமது திருமண உறவை அழிக்கக்கூடிய மிக
முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
எந்தவொரு உறவின் அடித்தளமும் மரியாதையுடன் தான் தொடங்குகிறது.
நாம் நமது துணையிடம் அவமரியாதையாக இருந்தால், நம் மண வாழ்க்கை
உறவை எதுவாலும் காப்பாற்ற முடியாமல் போய்விடும்.
ஒருவரையொருவர் மதிப்பதன் மூலம் வலுவான, அழகான, ஆரோக்கியமான
மணஉறவு கட்டமைக்கப்பட்டுகிறது.
திருமணத்தின் வெற்றிக்கு மரியாதை மிகவும் முக்கியமானது, இது அன்பை விட
உயர்ந்த இடத்தில் இருக்கிறது.
மரியாதை என்பது அன்பைப் போன்றதல்ல. அன்பை விட ஆழமானது. கணவன்
அல்லது மனைவி ஒருவரை ஒருவர் மதித்து நடப்பதை இருவரும்
உணர்வார்களானால் அங்கு இறைவனின் அருளும் ஆசிர்வாதமும் தாராளமாக
இருக்கும். தடையின்றி தளிர் விடும்.
எனவே திருமணத்தில் கணவனும் மனைவியும் மதிப்பும் மரியாதையும்
கொடுப்பதில் ஒருவருக்கு ஒருவர் முந்திக்கொள்ள வேண்டும்.
மரியாதையும் அர்ப்பணிப்பும் கொண்ட உறவு மட்டுமே காலத்தின்
சோதனைகளை தாண்டி சாதனை படைக்க சான்றாக இருக்கும்.
மணவாழ்வில் ஒருவருக்கொருவர் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும்
மதிப்பளிப்பது உறவை மேம்படுத்துவதற்கும் மகிழ்ச்சியான நிறைவான
மணவாழ்க்கை வாழ்வதற்கும் வழிவகுக்கவும்.