மனநோய் எதிர்ப்பு சக்தி
சவால்களை சங்கடங்களை அசாதாரண நிகழ்வுகளை சந்திக்கும்போத எமது உள்ளங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சில அசாதாரணமான மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம். மனோரீதியாக நம்மில் பலருக்கு கவலை, மனஅழுத்தம், சோகம், சலிப்பு, தனிமை, விரக்தி போன்ற உணர்ச்சிகளை உருவாக்கியும் இருக்கலாம். இந்த மனநிலை மாற்றங்கள் தற்காலிகமானவை. ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்த கடினமான உணர்வுகள் எம்மை கடந்து சென்றுவிடும்.
‘மனிதன் கவலைப்படுவது, அச்சமடைவது என்பது ஆதி மனிதர்களிடமிருந்து தொடர்ந்து வருகின்ற மனஎழுச்சியாகும்’ என்று உளவியளார்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மனிதன் உயிர் வாழவும் சவால்களுக்கு முகம் கொடுக்கவும் கவலை, தோல்வி போன்ற உணர்வுகளின் அனுபவங்களை எமது மனம் பெற்று தன்னை வளர்த்துக்கொள்கிறது என்றும் அவர்கள் கூறகின்றனர்.
அச்சம் இயல்பாகவே வரக்கூடிதொன்றாக இருந்தாலும் எமது மனம் சொல்லும் எல்லா அச்சங்களுக்கும்; நாம் செவிசாய்க்கத் தேவையில்லை. மனம் சொல்லும் எல்லாம் உண்மை என்று எடுத்த எடுப்பில் நாம் ஒருபோதும் நம்பிவிடக்கூடாது.
· மனம் என்ன சொல்கிறது என்பதை நாம் முதலில் கேட்க வேண்டும்.
· பின்னர் சொல்லும் விடயத்தில் என்ன உண்மை இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.
· எல்லா நேரத்திலும் மனம் சரியாகத்தான் சிந்திக்கிறது என்று நாம் நம்பினால் அது பாரிய மனப்பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.
· பிழையையும் சரியையும் சரியாக பிரித்தறிய முடியாத நிலையும் ஏற்பட்டுவிடும்.
பிழையாக வரும் எண்ணத்தை சரியாக நோக்குவதற்குறிய சக்தி எம் மனதில் இருக்கிறது. அதை நாம் வழர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக இக்காலத்தில் ‘கொரோனா தொற்று எனக்கும் ஏற்பட்டு விடுமா? “நான் நோய் வாய்பட்டு விடுவேனா” என்ற எண்ணம் பலரின் மனங்களில் வரலாம். இப்படியான எண்ணம் உங்கள் மனதில் வந்தால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் நான் தொற்றுக்கு உள்ளாகப் போகிறேன் அல்லது நான் நோய்வாய்;படப் போகிறேன் என்ற எண்ணம் எனக்குள் உருவாகி இருக்கிறது” என்று அந்த எண்ணத்தை மாற்றி மனதை பலப்படுத்த வேண்டும்.
ஒரு விடயத்தைப்பற்றி நாம் எவ்வளவு சிந்திக்கிறோம் என்பதில் எமக்கு கட்டுப்பாடு தேவை. எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணங்கள் எங்களை கட்டுப்படுத்த ஆரம்பிக்கும். சில சமயங்களில் கட்டுப்படுத்த கடினமான எண்ணங்களும் வரலாம். இருந்த போதிலும் அதைப்பற்றி கவலைப்படுவது சிறந்த முடிவுக்கு உத்தரவாதமாக இருக்காது.
மனம் ஒரு தவரான எண்ணத்தை தந்தால்…
· இந்த எண்ணம் சரியானதா? உண்மையானதா?
· இந்த எண்ணத்திற்;கு ஒரு அடிப்படை உள்ளதா?
· இந்த எண்ணம் எனக்கு ஒரு சக்தியை தருகிறதா? சக்தியை பரிக்கிறதா?
· இந்த எண்ணத்திற்;கு சரியான ஒரு பதிளை முன்வைக்க முடியுமா?
· இந்த எண்ணத்திலிருந்து எதையும் கற்றுக்கொள்ள முடியுமா?
· இந்த எதிர்மறை எண்ணம் இல்லாதிருந்தால் என் வாழ்க்கை எப்படியிருக்கும்?
இந்த வினாக்களை கருத்திற்கொண்டு அடுத்த முறை பொருந்தாத எண்ணங்கள் ஏற்படும் போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். இவற்றுக்கான பதில்களை ஒரு தாளில் எழுதுவதன் மூலம் மிகச்சிறந்த பதிலை பெற்றுக் கொள்ளலாம். அவற்றிலிருந்து இலகுவாக வெளிவரவும் முடியும்.
உடல் நோய் எதிர்ப்பு சக்தி போன்று மனநோய் எதிர்ப்பு சக்தி எமக்கு கட்டாயம் தேவை. உடலை ஆரோக்கியமாக வைப்பது போன்று உள்ளத்தை ஆரோக்கியமாக வைப்பது வெற்றிக்கான முதல் சூத்திரமாகும். போசனையுள்ள ஆகாரங்கள் உடலை ஆரேக்கியமாக வைப்பது போன்று அழகான எண்ணங்கள் மனதை ஆரோக்கியமாக வைக்க துணைபுரிகின்றன.
அழகான மற்றும் பயனுள்ள எண்ணங்கள் எமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதாகவும் எதிர்மறையான எண்ணங்கள் நோய் எதிர்;ப்பு சக்தியை குறைத்து விடுவதாகவும் மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
நோய்களை எதிர்த்து நிற்பில் மனபலம் மிகமுக்கிய காரணியாக இருக்கிறது.
பயம், கவலை, ஏமாற்றம். அச்சுறுத்தல் போன்றவற்றால் ஏற்படக்கூடிய உணர்;ச்சிசளை சகித்துக்கொள்ளக்கூடிய ஆற்றல் மனநோய் எதிர்ப்பு சக்தி என கருதலாம்.
மனதை அச்சுறுத்தும் எண்ணங்களையும் வெளிப்புற சவால்களையும் எதிர்கொள்வது மட்டுமல்லாமல் அவற்றால் ஏற்படும் பாதிப்பு உணர்ச்சிகளை சகித்துக் கொள்ளக்கூடிய சக்தி எமது மனதில் இருக்கவேண்டும். மனநேய் எதிர்ப்பு சக்தியால் எதிர்மறை எண்ணங்கள் வராமல் இருப்பதைத் தவிர்க்கவோ, மறுக்கவோ முடியும் என்பது பொருளல்ல. ஆனால் எதிர்மறை எண்ணங்கள் சொல்லும் விதத்தில் செயற்படாமல் அவற்றை மிகவும் கவனமாக கண்கானிக்க முடியும் என்பதே அதன் பொருளாகும். மனம் சொல்வதை உடனடியாகச் செய்வதைவிட மனம் என்ன சொல்கிறது என்பதை தெரிந்துகொள்வது இங்கு முக்கியமாகும்.
எமக்கு அச்சம் தரும் எண்ணங்கள் வரலாம். ஆனால் அவை எப்பொழுதும் உண்மையாக இருப்பதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் சந்திக்கும் சங்கடங்கள், அச்சங்கள் எல்லாம் நாம் எங்களை சரியின் பக்கம் மாற்றிக்கொள்வதற்கான விடயங்களாக கருதவேண்டும். சோதனைகள் ஏற்படும் போது அவற்றிலிருந்து நல்ல மாற்றங்கள் காண எம்மை தயாரக்க வேண்டும்.
நாம் முகம் கொடுக்க வேண்டும் என்று மனஉறுதியோடு செயற்பட்டால் நாம் எதனுடன் போராடுகிறோமோ அதை நலவின் பக்கம் மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு சக்தி எம்மில் பிறந்துவிடும். எம்மில் மாற்றத்தை காணவேண்டும் என்று நாம் விரும்பினால் உண்மையிலேயே அந்த விருப்பம் எம்மில் மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பித்துவிடும்.
நேற்று நடந்ததையும் நாளை நடக்கப் போவதையும் எண்ணிக்கொண்டிருக்காமல் இப்போதைய நேரத்தில் வாழ வேண்டும். மனவலிமை மற்றும் மனஉணர்ச்சி ஆரோக்கியத்தை வளர்ப்பதற்கு இது மிகவும் முக்கியமாகும்.
எமது உள உடல் வலிமைகளை பிரச்சினையொன்றால் சோர்வடைய விடாமல் பாதுகாத்துக் கொள்ளும் திறன் வெற்றிக்கான முதல் தேவையாகும்.
மிகச்சிறந்த எண்ணங்களால் மனவலிமையை வளர்த்து தைரியமான மனிதர்களாக வாழ்வோம்.