மனித குணத்தின் ஆழத்தை ஆராய்ந்து பார்த்தால், மனிதனின் உண்மையான அழகு அவனது உடல் தோற்றத்தில் இல்லை, ஆனால் அது அவனது உள்ளத்தில் இருப்பதைக் காணலாம்.
அவனது ஆன்மாவில் இருந்து வெளிப்படுவதை புரியலாம்.
தோற்றம் அவனை மனிதன் என்று அடையாளப்படுத்துகிறது. அவனது அழகான குணங்கள் அவனை உயர்ந்த படைப்பாக எடுத்துக் காட்டுகிறது.
நம்பிக்கை, மகிழ்ச்சி, நேர்மை, பொறுமை, பொறுப்பு, உண்மைத்தன்மை, விடாமுயற்சி, விசுவாசம், பணிவு, பாசம் போன்ற குணங்கள் மூலம் அழகு உள்ளிருந்து வெளிவருகிறது.
மனிதன் ஆரோக்கியமாகவும் அழகாகவும் வாழ வேண்டும் என்ற உணர்வு நல்வாழ்வின் நம்பிக்கையாக உள்ளே இருந்து தான் வெளிவருகிறது
உடல் கலைப்பையோ,
வயதையோ, வறுமையையோ பொருட்படுத்தாமல் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழவேண்டும் என்ற நேர்மறை மனப்பாங்கும் உள்ளே இருந்து தான் வெளிவருகிறது.
குறைபாடுகள், தவறுகள், ஏற்றம், இரக்கம் எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் திறன் எல்லாமே மனிதனுக்குள்ளே இருந்து தான் வெளிவருகிறது.
நல்ல குணங்களால் தன்னை வளர்த்து நல்ல நடத்தைகளால் தன்னை அறிமுகப்படுத்தி வாழ்வதற்கான அறிவும் அதற்கான உரிமையும் அவனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
நாம் எதை நல்லதாக நினைக்கிறோமோ, எதை நல்லதாக செய்கிறோமோ நாம் அதுவாக மாறுகிறோம். ஆக்கபூர்வமான சிந்தனை,
நம்பிக்கை, மகிழ்ச்சி, நேர்மை, பொறுமை, பொறுப்பு, உண்மைத்தன்மை, விடாமுயற்சி, விசுவாசம், பணிவு, பாசம் போன்ற குணங்களை ஒரு மனிதன் தன்னை வளர்ப்பதற்கும் தான் உயர்ந்த படைப்பு என்பதை நிரூபித்துக் காட்டுவதற்கும் தேர்ந்தெடுக்க வேண்டிய அடிப்படைப் பழக்கங்களாக ஆக்கிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறான்.
மனிதனுக்கு மட்டுமே உரித்தான இந்த உயர் குணங்களை நாம் நமக்குள் கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் எம்மை மற்றவர்கள் காணும்போது ஒரு அழகான ஆன்மாவைக் காண்பதான உணர்வு அவர்களில் உருவாக வேண்டும். அந்த உணர்வை உருவாக்கி, நாம் உயர்வான மனிதர்கள் என்ற அங்கீகாரத்தை பெற்றுத் தரும் அபார சக்தி இந்த குணங்களுக்கு உண்டு.
நாம் ஒவ்வொருவரும் தோற்றத்தை தாண்டிய ஒரு உள் அழகுக்கு சொந்தக்காரராக இருக்கிறோம் என்ற உண்மையை உறுதியாக ஏற்றுக் கொள்வோம்.
மனித வாழ்வில் உடல் தோற்றம் முக்கிய பங்கு வகிக்கும் அதே வேளையில், நாம் இங்கு விவாதித்த உள் காரணிகள் மனித வாழ்க்கையின் தரத்தை தீர்மானிக்கின்றன என்பதை மறந்து விடக்கூடாது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள குணநலன்களையும் பழக்கவழக்கங்களையும் வளர்த்துக்கொள்வதன் மூலம், தரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.
நாம் மற்றவர்களுக்கு மிகவும் கவர்ச்சியானவராகவும் பயனுள்ளவராகவும் மாறலாம்.
எம்மால் ஒரு நிறைவான, நேர்மறையான, நம்பிக்கையான வாழ்க்கையை வாழ முடியும்.
உடல் கவர்ச்சி பற்றி ஒவ்வொரும் கொண்டுள்ள கருத்தோட்டம் மாறுபடலாம்.
ஆனால் வாழ்க்கையை வெறும் கவர்ச்சியானதாக இல்லாமல் மதிப்புமிக்கதாக அமைத்துக் கொள்வதுவே முதன்மையானது என்பதை நினைவில் கொள்வோம்.
➖➖➖➖
அஸ்ஹர் அன்ஸார் FRSPH (UK)
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்