மனிதம் வாழும் மனை
மனையை மனையாக
மாற்றுவோம்
மனிதர் வாழும்
மாண்புமிகு
மாளிகையாக
மாற்றுவோம்
முழக்கமும்
மோதலும் இல்லாத
நடிப்பும் நாடகமும்
இல்லாத கலைமனையாக
மாற்றுவோம்
புன்னகை
மறைக்கப்பட்ட புருவமாக
கண்ணீரில் மூழ்கிய
கண்களாக அல்லாமல்
கல்பில் வளரும்
காவியமாக
மாற்றுவோம்
வலிகளால் குத்தப்படும்
வதைக்கூடமாக அல்லாமல்
மலர்கள் சிரிக்கும்
பள்ளிக்கூடமாக
மாற்றுவோம்
சுவர்களால் மறைக்கப்பட்ட
இடமாக அல்லாமல்
சுவனத்து மொட்டுக்கள்
விளையாடும் மைதானமாக
மாற்றுவோம்
பொறாமையும்
பேராசையும் குடியிருக்கும்
கோட்டையாக அல்லாமல்
அழகான கனவுகளுடன்
பயணிக்கும்
மாவீரனின் பாதையாக
மாற்றுவோம்
நண்பர்களினதும்
அயலவர்களினதும்
கற்பனையில் உருவான
கட்டிடமாக அல்லாமல்
இறைவனின் சட்டங்களால்
மட்டுமே அலங்காரமான
பரிசுத்த மன்றமாக
மாற்றுவோம் –
எமது மனையை
மனிதர் சேர்ந்து வாழும்
மகிழ்ச்சி மனையாக
மாற்றுவோம்
பூமியில் விழுந்த
சொர்க்கத்தின் துண்டாய்
மாற்றுவோம்