மரியாதை; வார்த்தைகள் மரணத்தை அல்லது வாழ்வை கொண்டுவரலாம்

மதிப்பும் மரியாதையும்
வார்த்தைகள் மரணத்தை அல்லது வாழ்வை கொண்டுவரலாம்

நாம் ஒவ்வொருவருடனும் மதிப்புடனும் மரியாதையுடனும் நடந்துகொள்வதை எதிர்பார்க்கின்றோம்.

மதிப்பும் மரியாதையும் உறவை வளர்ப்பதிலும் வலுப்படுத்துவதிலும் மிகப்பெரும் தாக்கம் செலுத்தும் விடயங்களாகும்.

மரியாதையின் உயரிய பண்புகளை வெளிப்படுத்திய நபிகளாரின் அற்புத வாழ்வியல் கலையை நபித்தோழர் அனஸ் இப்னு மாலிக் ரழி கூறும் விதம் எமக்கு அழகாக உளவியல் பாடம் கற்பிக்கிறது.

“நான் நபிகளாருக்கு பத்து வருடங்கள் பணிவிடை செய்தேன். அவர்களோடு சேர்ந்து வாழ்ந்தேன். ஒரு முறைகூட அவர் என்னை கண்டிக்கவில்லை. ஒரு முறைகூட அவரது வாயிலிருந்து ‘சி’ என்ற வார்த்தை வெளிவரவில்லை. நீங்கள் ஏன் இதை செய்தீர்கள்? அல்லது ஏன் செய்யவில்லை? என்று என்னிடம் ஒருபோதும் அவர் கேட்டதில்லை.

எரிச்சலை வெளிப்படுத்த மிகச்சிறிய சொல்லாக ‘சீ’ பயன்படுத்தப்படுவது எமக்கு தெரியும். இது கோபத்தின் வார்த்தை அல்ல.

பத்து வருடங்கள் கோபப்படாமல் எரிச்சல் அடையாமல் இருப்பது என்பது எப்படி முடியும் என்று எமது மனம் எம்மைக் கேட்கலாம்.

ஆனால் அது முடியுமானது என்பதையே நபிகளார் எமக்குக் காட்டியிருக்கிறார்.

இதை ஒப்பிடும் போது நாம் எங்கே இருக்கிறோம். எமக்கு எவ்வளவு இலகுவாக எரிச்சல் ஏற்படுகிறது.

எம் உறவோடு உணர்வோடு நெருங்கியிருக்கும் ஒருவர் ஒரு சிறிய தவறு செய்வதை காணும் போது கூட நாம் பொறுமை இழந்து அவசரமும் ஆவேசமும் கொண்டு அசிங்கமான வார்த்தைகளால் திட்டித் தீர்ப்பவர்களை காண்கிறோம். வாய் கூசாமல் சாபம் செய்பவர்களையும் கண்டிருக்கிறோம். உணர்வுகளை அக்கணமே உடைத்துவிடுபவர்களை பார்த்திருக்கிறோம்.

மோசமான பேச்சுக்கள், திட்டல்கள், ஏச்சுகள் உறவை மறைக்கும் பலத்த சுவர்களாகும்.
வார்த்தைகள் மரணத்தை அல்லது வாழ்வை கொண்டுவரலாம் என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
மரியாதையின் குணங்குறிகள் அகன்றுபோனால் எமது நடத்தைகள் அசிங்கமானவையாக வெளிவரும்.
மரியாதையின் குணங்குறிகளை வார்த்தையால், நடத்தையால் நபிகளார் எமக்கு எடுத்துக்காட்டியிருக்கும்போது…
ஏன் அதை நாம் பின்பற்றாதிருக்கிறோம்?

அப்படியானால் எமக்குள் ஏதோ குறையிருக்கிறது.
நாம் எம்மை சரிசெய்துகொள்ள வேண்டும்.
மனித உணர்வுகளை புரிந்து, மதித்து வாழ்ந்து காட்டிய நபிகளாரின் உயரிய குணத்தை எமது நடத்தையில் வெளிப்படுத்த தவறினால் நாம் மரியாதைக்கு உட்படாதவராக ஆகிவிடலாம்.

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top