மற்றவர் உள்ளமறிந்து செயற்படுவோம்!

மற்றவர் உள்ளமறிந்து செயற்படுவோம்!

மற்றவர்களின் உணர்வை அறிவது ஒரு சமூகத்தின் வெற்றியின் ஆரம்பம்

ஒரு சிறுவனுக்கு பூனை மீது பிரியம் இருந்தது. ஒரு பூனையைப் பெற்றுக்கொள்ள நீண்ட காலம் ஆசையோடும் எதிர்பார்ப்போடும் இருந்தான். ஒரு பூனைக்குட்டியை வாங்குவதற்காகவென அவனுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு ரூபாய் பணத்தையும் ஒரு முட்டியில் சேமித்து வந்தான்.

ஒரு நாள் சற்றுத்தொலைவிலுள்ள ஒரு வீட்டில் பூனைக்குட்டிகள் விற்கப்படுவதான செய்தி அவனுக்குக் கிடைத்தது. உடனடியாக முட்டியை உடைத்து அதிலிருந்த சில்லறைக்காசுகளை எடுத்து பூனை விற்கப்படும் இடத்திற்குச் சென்றான்.
எனக்கு ஒரு பூனை வேண்டும் தரமுடியுமா? என்று உரிமையாளரிடம் கேட்டான்.

அப்பாவித்தனமான அவனது முகத்தைக் கண்ட அவர் ‘ஆம் கண்டிப்பாகத் தருகிறேன்’. என்று கூறி பூனைக்குட்டிகள் இருந்த இடத்தை அண்மித்து உனக்கு வேண்டிய பூனையை எடுத்துக்கொள்ளலாம் ஆனால் இந்த பூனைக்குட்டிகள் நல்ல ரகத்தைச் சார்ந்தவை, அதனால் விலை கொஞ்சம் கூடதலாக இருக்கும் என்றார். அதைக் கேட்டதுமே சிறுவன் தலையை சற்றுநேரம் குனித்துக்கொண்டான். என்ன செய்வது? சற்றுத் தடுமாற்றத்தோடு தனது கால் சட்டைப்பைக்குள் கையைப்போட்டு அதிலிருந்த சில்லறைக்காசுகளை எடுத்து

‘என்னிடம் 200 ரூபாய் மட்டுமே இருக்கிறது. அந்தப் பணம் போதுமா?’ என்று மெல்லிய குரலில் கேட்டான். ‘ஆம். அது போதும்’ என்று கூறி பூனைக்கூட்டை திறந்து விட்டார்.
பார்ப்பதற்கு உருண்டை வடிவிலான அழகான நீண்ட ரோமங்களை உடைய பூனைக்குட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாகப் பாய்ந்து வெளியே வந்தன. அவற்றைக் கண்டதுமே அவன் முகத்தில் அழகான புன்சிரிப்பு பூக்கத் தொடங்கியது. பூனைக்குட்டிகள் எல்லாம் வெளியே உள்ள முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தன. அப்பொழுது கூட்டிலிருந்து மற்றொரு அழகான பூனைக்குட்டி எட்டிப்பார்ப்பது அவன் கண்களுக்குப்பட்டது. அந்தப் பூனைக்குட்டி பார்ப்பதற்கு சற்று சிறிதாக இருந்தது. அத்தோடு மற்றப்பூனைக் குட்டிகளைப் போலன்றி மிகவும் சிரமப்பட்டு மெதுவாக நடந்து வந்து ஏனையவற்றோடு சேர்ந்து கொண்டது.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன்,

‘ஐயா! எனக்கு அந்தப் பூனைக்குட்டியைத் தாருங்கள்’ என்று உரிமையாளரைக் கேட்டான்.
உரிமையாளர் தன் முன்னங்கால்களை மடித்து பூமியில் வைத்து சிறுவனின் முகத்தை நேரடியாகப் பார்த்தவாறு, மகனே! இந்தப் பூனைக்குட்டி உனக்கு வேண்டாம். மற்றப்பூனைக் குட்டிகளைப்போன்று இதனால் ஓடவோ உன்னோடு விளையாடவோ முடியாது’ என்றார்.

அதைக் கேட்ட சிறுவன் தனது கால்களை பின்னோக்கி வைத்து மண்ணில் அமர்ந்து தனது வலது கால்சட்டையை மடித்து,
ஐயா! இதோ பாருங்கள், என்னால் கூட சரியாக நடக்கவோ ஓடி ஆடவோ முடியாது. எனது கால்கள சமநிலையாக இருக்க இரண்டு பக்கமும் இரும்புக்கம்பியின் துணையுடன் விசேடமாக வடிவமைக்கப்பட்ட பாதணி பொருத்தப்பட்டிருக்கிறது. எனக்கு அந்தப்பூனையையே தாருங்கள். அதை புரிந்து கொள்ளக்கூடிய ஒருவர் அதற்கும் தேவைதானே என்றான்.
மற்றவர் மனமறிந்து உணர்வறிந்து செயற்பட வேண்டும் என்பதையே இந்தக்கதை எங்களுக்குப் பாடம் கற்பிக்கிறது. வீட்டிலும் சரி, தொழில் புரியும் இடத்திலும் சரி மற்றவர் மனமறிந்து செயற்படுவதை அவர்கள் உணர்ந்து கொண்டால் அவர்கள் உள்ளம் மட்டுமன்றி அவர்கள் இருக்கும் இடம் கூட அமைதியும் அழகும் பெறும். தம்மைப் புரிந்துகொள்ளக்கூடியவர்கள் இருக்கின்றார்களா என்ற ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் இருக்கும் மனிதர்கள் இந்த பூமியில் ஏராளமாகவே இருக்கிறார்கள்.

மற்றவர்கள் உணர்வறிதல் எம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய, வளர்த்துக்கொள்ள வேண்டிய மிக முக்கிய மனித ஆற்றலாகும். மற்றவரின் உணர்வை அறியாமல் அவர்களின் உள்ளத்தை அறிந்து செயற்படாமல் இந்த மண்ணில் மனிதனாக வாழ முடியாது.

மற்றவர் மனம் அறிதல் என்பது மற்றவர்கள் உணரும் உணர்வுகளை அவர்கள் உணர்வது போல் உணர்வதை அல்லது அனுபவிப்பதையும் குறிக்கும்.
நாம் எங்களை முழுமையாக மறந்துவிட்டு எமது தனித்துவத்தை தள்ளிவிட்டு நாம் அவர்களாக எம்மை மாற்றிக்கொள்வது என்பது இதன் பொருளல்ல.
மற்றவர் என்ன நினைக்கிறார்?
எவ்வாறான உணர்வுகள் அவரில் உள்ளன?
அவர் அனுபவங்கள் எப்படி இருக்கின்றன?
என்பதையெல்லாம் புரிந்துகொள்வதாகும்.

கணவன் மனைவியின் உள்ளமறிந்து செயற்படுவதும், மனைவி கணவனின் உள்ளமறிந்து செயற்படுவதும், பெற்றோர் பிள்ளைகளின் உள்ளமறிந்து செயற்படுவதும், பிள்ளைகள் பெற்றோரின் உள்ளமறிந்து செயற்படுவதும் குடும்பத்தில் அன்பு, அரவணைப்பு, ஒற்றுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உதவி செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை, இன்பத்திலும் துன்பத்திலும் சேர்ந்துகொள்ளும் மனநிலை போன்ற அழகான பண்புகள் உருவாகவும் அதிகரிக்கவும் காரணமாக அமைந்துவிடும்.

கணவன் மனைவி உறவிலும், பெற்றோர் பிள்ளை உறவிலும், முதலாளி தொழிலாளி உறவிலும், ஆசிரிய மாணவ உறவிலும், நண்பர்களின் உறவிலும் இப்படி ஒவ்வொரு உறவு முறைகளிலும் ஒருவர் மற்றவரது மனமறிந்து, உணர்வறிந்து செயற்படுவது மனித உறவிலும் விருத்தியிலும் மிகப்பொரும் தாக்கம் செலுத்துகின்கிறது.

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top