மற்றவர் நிலை அறிந்து பேசுவோம்
மரியாதை என்பது மற்றவர் யாராக இருந்தாலும் அவருடன் அழகாக நடந்துகொள்வதாகும்
நகரம் ஒன்றில் கண்பார்வையற்ற ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார்.
அவர் பார்வையற்றவராக இருந்தாலும் இரவில் வெளியே செல்லும் போதெல்லாம் ஒரு ஒளிரும் விளக்கை தன்னுடன் எடுத்துச் செல்வார்.
ஒரு நாள் கடையில் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு தனது வீட்டைநோக்கி நடந்து வந்துகொண்டிருந்தபோது இளம் பயணிகள் சிலர் அவருக்கு குறிக்கிடுகின்றனர்.
அவர் குருடாக இருப்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.
ஆனால் ஒளிரும் விளக்கை கையில் சுமந்துகொண்டு செல்வது அவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது.
பல கேலியான வார்த்தைகளைச் சொல்லி அந்த அப்பாவி மனிதரை அவர்கள் ஏளனம் செய்தனர். ஏய் மனிதா? நீ குருடாக இருக்கிறாய். உன்னால் எதையும் பார்க்க முடியாது. ஏன் நீ ஒளிரும் விளக்கை ஏந்திச் செல்கிறாய்? என்று அவரை வேடிக்கைச் சிரிப்புடன் கேட்டனர். ஆம்! நான் துரதிர்ஸ்டவசமாக குருடனாக இருக்கிறேன். என்னால் எதையும் பார்க்க முடியாது. ஆனால் உங்களைப் போன்ற நல்ல பார்வை உடையவர்களுக்காகத்தான் நான் இந்த ஒளிரும் விளக்கை கையில் சுமந்து வருகிறேன். விளக்குடன் வராவிட்டால் இருட்டில் இந்தக் குருட்டு மனிதன் வருவது உங்கள் பார்வைக்கு படாமல் உங்களால் தட்டுப்பட்டு கீழே விழுந்து விடமுடியும். அதனால் இந்த ஒளிரும் விளக்கை கையில் சுமந்து வருகிறேன். என்று மௌனமாகக் கூறினார். அதை கேட்ட இளம் பயணிகள் வெட்கப்பட்டு மன்னிப்புக் கோரினர்.
ஆம்! நாம் மற்றவர்கள் பற்றி எடுத்த எடுப்பில் தீர்ப்புக் கூற பழகியிருக்கிறோம். இது மிகவும் மோசமான பழக்கம். நாம் மற்றவர்கள் பற்றி பேசும் போது சிலசமயம் அவர்களை பற்றி தெரிந்ததை தெரியாததை எல்லாம் வாய் கூசாமல் உலறிவிடுகிறோம். நாம் உண்மையாகவே அவர்களின் உணர்வுகளை அவர்களின் உண்மைத் தன்மையை புரிவதில் அசமந்தமாக இருந்து விடுகிறோம். மற்றவர்களின் மனம் அறிந்து அவர்கள் மதிக்கப்படுவதை உணர்த்தி அவர்கள் யார்,எப்படிப்பட்டவர்கள் என்பதை அவர்களிடமிருந்தே உண்மையாக தெரிந்துகொண்ட பின்னரே அவர்பற்றி கருத்து தெரிவிப்பது சரியானது.
மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கும் அவர்களின் இயல்பான நடத்தைகளுக்கும் நாம் கவனம் செலுத்தவேண்டும்;நாம் மற்றவர்களை எடுத்த எடுப்பில் விமர்சிக்காமல் அவர்கள் மீது கண்ணியமான பார்வையை செலுத்தி அவர்களின் உண்மைநிலையை புரிந்தபின்னரே கருத்துத் தெரிவிக்க வேண்டும்.