மற்றவர் மகிழ்ச்சியில் நான்….?

மற்றவர் மகிழ்ச்சியில்
நான்….?

▪️மற்றவர்களின் வெற்றியில் மகிழ்ச்சி காண்பவரை நீங்கள் கண்டதுண்டா?
▪️மற்றவருக்கு ஒரு நலவு நடக்கும் போது அவரை ஊக்கப்படுத்தி உற்சாகம் தந்து தானும் அந்த சந்தர்ப்பத்தை அனுபவிக்கும் மனிதரை பார்த்ததுண்டா?
▪️அல்லது மற்றவர்களின் வெற்றியை கொண்டாடுவதில் ஏதோ விதத்தில் விருப்பம் காட்டும் மனிதரை கண்டதுண்டா?
இப்படியான ஒரு மனிதராக நீங்கள் இருந்தால் உணர்ச்சி முதிர்ச்சியடைந்த ஒரு சிறந்த மனிதராக நீங்கள் இருக்கிறீர்கள் என்பது தான் இதன் உண்மையாகும்.

வாழ்க்கையில் சற்று நேரத்திற்கு நாம் நம்முடைய சொந்த நலன்களை ஒதுக்கி வைத்துவிட்டு, வேறொருவருக்காக உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பது ஒரு சாதாரண விடயம் அல்ல. அது ஒரு உயர்வான மனிதக் குணமாகும். இந்த குணம் உள்ளவராக நீங்கள் இருந்தால் சமூக நலத்திற்கும் அதன் இருப்பிற்கும் கைகொடுக்கும் பரந்த மனம் பெற்றவராக நீங்கள் இருப்பீர்கள்.

இருப்பினும், ஆழ்ந்த சுயநலவாதிகள் பெரும்பாலும் இந்த விடயத்தில் விருப்பம் காட்டவே மாட்டார்கள்.
▪️அவர்கள் மற்றவர்களின் சாதனைகளை குறைத்து மதிப்பிடுவார்கள்.
▪️மற்றவர்களின் வெற்றியின் போதும் அடைவின் போதும் தங்கள் கவனத்தைத் திருப்பிக் கொள்வார்கள். அல்லது
▪️மற்றவர்களின் வெற்றியால் ஒருவிதமான மன அச்சுறுத்தலுக்கு உள்ளாவார்கள்.
இந்த நடத்தை ஒரு பக்குவமற்ற மனநிலையிலிருந்து உருவாகிறது. சமூக உணர்வு இல்லாத மனதில் இருந்துதான் இந்த குணம் தோன்றுகிறது.
இந்த இடத்தில் இவர்கள்
▪️வேறொருவருக்கு கிடைத்த ஆதாயத்தை தங்கள் இழப்பாக உணர்கிறார்கள்.
▪️வேறொருவரின் ஆறுதலை தங்களுக்கு பாரமாக நினைக்கின்றார்கள்.
▪️மற்றவர்களின் வெற்றியை தனித்தன்மையாக பார்க்க விரும்பாதவர்களாக தம்மை ஆக்கிக்கொள்கிறார்கள்.
இப்படியான மனிதர்கள் இந்த சமூகத்தில் இருப்பது கண்டு நீங்கள் பல சந்தர்ப்பங்களில் மனம் கலங்கிப் போயிருப்பார்கள்.
நன்கு படித்து பட்டம் பெற்றவர்களிடம் இந்த அசிங்கமான குணம் இருப்பதை காணும் போதெல்லாம் உங்கள் மனம் ஒரு கனம் ஆடி அசைந்து போயிருக்கும்.

மற்றவர்களின் வெற்றிகளை ஏற்றுக் கொள்ளவும், அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து, பாராட்டி, பிரார்த்தனை செய்யவும் தவறிய ஒருவரை நீங்கள் கவனித்தால் அல்லது அவர்களின் வெற்றிகளை மறைக்க முயற்சிக்கும் ஒருவரை நீங்கள் கண்டால் ஆழ்ந்த சுயநலத்தின் அடையாளம் அங்கு வெளிப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

▪️எம் ஒவ்வொருவரின் பயணமும் தனித்தன்மை வாய்ந்தது.
▪️எம் ஒவ்வொருவரின் வெற்றியும் தனித்துவமானது.
▪️ எம் ஒவ்வொருவரின் அடைவும் மகிழ்ச்சியும் அவரவருக்கு சொந்தமானது.
▪️எம் ஒவ்வொருவரிடமும் தனித்துவமான ஆற்றல்கள் உண்டு.
▪️எங்களுக்கே உரித்தான திறன்கள் உண்டு.
எல்லோருக்கும் ஒரேவிதமான ஆற்றல்கள் இருந்ததால் இந்த உலகம் ஒருபோதும் சரியாக இயங்காது.
ஒவ்வொரு மனிதனின் தனித்துவமான திறன்கள் வளமான சமூகத்தை உருவாக்க கட்டாயம் தேவை என்பதை நாம் உணர வேண்டும். ஒவ்வொருவரின் ஆற்றல்களையும் அவ்வாறே அவரவர் அடையும் சந்தோசங்களையும் மதிக்கும் மனிதர்களாக நாம் எல்லோரும் இருக்க கடமைப்பட்டு இருக்கிறோம். அப்போது தான் பலதரப்பட்ட ஆற்றல்களால் செழிப்புற்ற மனிதர்கள் வாழும் சமூகத்தை கட்டியெழுப்ப கை கொடுக்கலாம்.

இந்த அழகான குணத்தால் பண்பட்ட மனிதராக நாங்கள் இருக்க இறைவன் எங்களுக்கு அருள் புரிய வேண்டும்.
➖➖➖➖
அஸ்ஹர் அன்ஸார்
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்

 

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்
Back To Top