வார்த்தைகள் ஒரு மனிதன் போகும் பாதையை மாற்றிவிடலாம்

வளமான வார்த்தைகள்
———————–
வார்த்தைகள் ஒரு மனிதன் போகும் பாதையை மாற்றிவிடலாம்

சுய கவனிப்பு அல்லது எம்மை நாம் கவனித்துக்கொள்வது பற்றி சிந்திக்கும் போது நாம் பேசும் வார்த்தைகளை கருத்தில் கொள்ளவது மிக மிக முக்கியமாகும்.

நாம் நினைக்கின்றோம்.
நினைத்துவிட்டு பேசுகின்றோம்.
நாம் நினைக்கின்றவை பெரும்பாலும் எமது வாயிலிருந்து வெளியே பாய்ந்து மற்றொருவரின் காதுகளில் இலேசாக புகுந்துகொள்கின்றன.
அப்படி புகுந்துவிட்ட வார்த்தைகளை எம்மால் ஒருபோதும் வெளியே எடுத்துவிட முடியாது.

நாம் எம்மை பற்றி உணர்கின்ற விதத்திலும் மற்றவர்கள் எம்மை பற்றி நினைக்கின்ற, உணர்கின்ற விதத்திலும் வார்த்தைகள் பெரும் தாக்கம் செலுத்துகின்றன.
எமது தலைக்குள் நடக்கின்ற விடயங்களை மற்றவர்களுடன் தொடர்புகொள்ள வைக்கின்ற முக்கிய அடையாளமாக இருப்பது எமது வார்த்தைகள்.
நாம் எமது கவலைகளையும் கனவுகளையும் வார்த்தைகளால் பகிர்ந்துகொள்கிறோம்.
அன்பையும் ஆனந்தத்தையும் வார்த்தைகளால் பகிர்ந்துகொள்கிறோம்.
இப்படி பலவற்றை வார்த்தைகளால் பகிர்ந்துகொள்கிறோம்.

இந்த வார்த்தை பரிமாற்றத்தின் உண்மை நிலை என்ன?
நாம் இதை கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும்.

எங்கள் வார்த்தைகள் செயலை உருவாக்குகின்றன.
அதாவது எமது வார்த்தைகளால் …
நெருக்கத்தை உருவாக்கலாம் பிரிவையும் உருவாக்கலாம்
சங்கடத்தை ஏற்படுத்தலாம் சமாதானத்தையும் ஏற்படுத்தலாம்
அமைதிப்படுத்தலாம் அவ்வாறே அசிங்கப்படுத்தலாம்
ஒருபோதும் செய்ய முடியாது என்று நினைக்கும் விடயங்களைக்கூட செய்துமுடிக்க ஊக்குவிக்கலாம்
மற்றவர்களின் உள்ளுணர்வுகளை தூண்டி, உற்சாகமூட்டி வெற்றியாளராக மாற்றுவிக்கலாம்

வார்த்தைகள் ஒரு மனிதன் போகும் பாதையை மாற்றிவிடலாம்
ஒரு சமூகத்தின்,தேசத்தின் திசையைகூட மாற்றிவிடலாம்.
அதனால் நாம் என்ன நினைக்கிறோம் என்பதை சரியாக நோக்குவோம்.
நினைவில் இருந்து வெளிவரும் வார்த்தைகளை கவனமாய் கண்காணிப்போம்.
வடிகட்டிய வார்த்தைகளாக எமது வார்த்தைகளை வெளிப்படுத்தவோம்.
நல்ல, பயனுள்ள வார்த்தைகளை மட்டும் உச்சரிக்க நாவிற்கு அனுமதி கொடுப்போம்.

வார்த்தைகளை பின்தொடரும் செயல்களை சரியாக அறிந்துகொள்வோம்.
கவனமான எண்ணங்களும் தெளிவான வார்த்தைகளும் பெரும்பாலான பிரச்சினைகளை தீர்த்துவிடும்.

எமது வார்த்தைகளை வளமாகவும் பயனாகவும் வெளிப்படுத்த ஆசைப்படும் நாம் எமது நினைப்புகளை நியாயமாகவும் நீதியாகவும் ஆக்கிக்கொள்வோம்

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top