நாம் சிலசமயம் மற்றவர்களின் வாழ்க்கையை பார்த்து எமது
வாழ்க்கையை அளவிட்டுப்பார்க்கிறோம்.
அவர்கள் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள்….. அவர்களுக்கு எதுதான்
இல்லை…..நாம் எப்படி வாழ்கிறோம்……அவர்களுக்கும் எங்களுக்கும்
எவ்வளவு வித்தியாசங்கள்….
இப்படி பல கோணங்களில் எமது வாழ்க்கையை மற்றவர்களின்
வாழ்க்கையுடன் அளவீடு செய்கிறோம்.
இப்படி எமது வீட்டை, பொருளை, உடலமைப்பை, அறிவாற்றலை என
பலவற்றை அளவீடு செய்கிறோம்.
அதிகப்படியான அளவீடு மனமகிழ்ச்சியை குறைத்து சுயமரியாதையை
இல்லாமல் ஆக்கிவிடும்.
எங்களை விரக்தியில் ஆழ்த்திவிடும். மற்றவர்கள் முன் கோபப்பட
வைத்துவிடும்.
அளவீடுகள் தொடர்ந்தால் பொறாமை உணர்வையும் நம்பிக்கை
இன்மைமையும் உருவாக்கிவிடும்.
எமக்கு இருப்பதை விட அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று
கடைசியில் கவலைப்பட வைத்துவிடும்.
இந்த அளவீடுகளும் அளவீடுகளால் ஏற்படும் பாதிப்புக்களும்
கடைசியில் எம்மை ஒரு கடன்காரனை போல்….ஒரு சிறைக்கைதியை
போல்.. அல்லது ஒரு அடிமையைப் போல்… ஆக்கிவிடலாம்.
எமக்கு இருப்பதை…. போதும் என்று ஏற்றுக் கொள்ளாததாலும் ..
இருப்பதை கொண்டு திருப்தி அடையாததாலும் …நாம் மற்றவரின்
வாழ்வோடு எமது வாழ்வை அளந்து பார்க்கிறோம்.
அதாவது….நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை விட …. நாம்
என்னவாக இருக்க விரும்புகிறோம் என்பதில் கவனம் செலுத்துகிறோம்.
இந்த அளவீடுகள் மிகவும் ஆபத்தானவை.
எமது வாழ்க்கை ஒரு பந்தயமும் அல்ல…போட்டியும் அல்ல..
எங்களுக்கு போட்டியாளர்களும் இல்லை. பந்தயக்காரர்களாகவும்
போட்டியாளர்களாகவும் நாமே எம்மை ஆக்கிக் கொள்கிறோம்.
நாம் வாழ்க்கையை பந்தயமாக அல்லது போட்டியாக ஆக்கிக்
கொண்டால்…திருப்தி என்பது அறவே இல்லாமல் போய்விடும்.
நாம் மற்றவர்களின் வாழ்க்கையை வாழ பிறந்தவர்கள் அல்ல. எமது
வாழ்க்கைக்கு நாமே சொந்தக்காரர்கள்.
எமது வாழ்க்கை எமக்கானது. ஒவ்வொருவரின் தேவைகள் ஆளுக்கு
ஆள் வித்தியாசமாகவும் சிலசமயம் விசித்திரமானதாகவும் இருக்கும்.
எமது வாழ்க்கைக்கான தேவை எமக்குள் இருந்து தான் வரவேண்டும்.
தேவைகள் எவ்வளவு எளிமையாக இருக்குமோ வாழ்க்கை அவ்வளவு
இனிமையானதாக இருக்கும்.
எமக்கு இப்போது இருப்பதில் திருப்தி அடைந்தால்… எமக்கு
போதுமானது எமக்கு கிடைத்திருக்கிறது என்று மனதார ஏற்றுக்
கொண்டால்…
போதாது என்று நினைக்கையில் போதுமாக்கிக் கொள்ள சரியான
முறைகளை கையாண்டால்…அனாவசியமாக அளவீடுகள் இல்லாத
அழகான வாழ்க்கை எமக்கு சொந்தமாகிவிடும்.